நிலத்தடி நீர் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் தகவல்
நிலத்தடி நீர் மாசுபாட்டை குறைக்க நடவடிக்கை மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் தகவல்
ADDED : ஜன 23, 2024 11:59 PM

மாமல்லபுரம்:நிலத்தடி நீரின் 14 சதவீத மாசுபாட்டை, 10 சதவீதமாக குறைக்க, ஆய்வு மேற்கொளளப்பட்டு வருவதாக, மத்திய ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் கூறினார்.
ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நீர் இயக்கம் சார்பில், 2047ம் ஆண்டு நீராதார தொலைநோக்கு பார்வை - முன்னோக்கிய பயணம் குறித்து, அனைத்து மாநில செயலர்களின் இரண்டு நாள் மாநாடு, மாமல்லபுரத்தில் நேற்று துவங்கியது.
ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத், தமிழக நீர்வள துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய நீர்வள துறை ஆறுகள் மேம்பாட்டு செயலர் தீபஸ்ரீ முகர்ஜி, தமிழக கூடுதல் முதன்மை செயலர் சந்தீப் சக்சேனா, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநாட்டில், மத்திய அமைச்சர் பேசியதாவது:
மாநிலங்களில் ஆற்று மாசுக்களை அகற்றி துாய்மைப்படுத்த, அரசுகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கங்கை ஆற்றின் புனரமைப்பை முன்னுதாரணமாக கொண்டு செயல்படலாம்.
நீர் பற்றாக்குறை, அடுத்த 25 ஆண்டுகளுக்கு சவாலாக இருக்கும். அதற்கேற்ப தொலைநோக்கு திட்டங்கள் வகுப்பது அவசியம்.
நிலத்தடி நீர் மட்டத்தை, தொழில்நுட்பங்கள் வாயிலாக உயர்த்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும். பற்றாக்குறையை தீர்க்க, நீர் மேலாண்மை முக்கியம்.
விவசாயத்தில் பயன்பாட்டை குறைத்து, உற்பத்தியை பெருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நீர்வள மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு, மத்திய பிரதேசம் போபாலில் நடந்த முதல் மாநாட்டில், 22 தீர்மானங்கள் ஏற்கப்பட்டன. அவற்றின் செயல்பாடு, முன்னேற்றங்கள் குறித்து, தற்போது பரிசீலிக்கப்படும்.
நாட்டின் நிலத்தடிநீர் 25 லட்சம் சதுர கி.மீ., என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் 14 சதவீதம் மாசடைந்துள்ளது. அதை 10 சதவீதமாக குறைக்க ஆய்வு நடக்கிறது.
நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நதிகள் இணைப்பு குறித்து, மாநில அரசுகளுடன் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

