'அப்பீல்' மனு விசாரணைக்கு 8 ஆண்டுகள்: தகவல் ஆணையம் மீது ஆர்வலர்கள் புகார்
'அப்பீல்' மனு விசாரணைக்கு 8 ஆண்டுகள்: தகவல் ஆணையம் மீது ஆர்வலர்கள் புகார்
UPDATED : மே 05, 2025 06:05 AM
ADDED : மே 05, 2025 01:40 AM

சென்னை: உரிய முறையில் தகவல் கிடைக்கவில்லை என, 2017ல் அளிக்கப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, எட்டு ஆண்டுகளுக்கு பின் துவங்கியிருப்பதாக, புகார் எழுந்துள்ளது.
அரசு துறைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் பெற, தகவல் அறியும் உரிமை சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி அளிக்கும் மனுக்களுக்கு, பொது தகவல் அலுவலர், 30 நாட்களில் பதில் அளிக்க வேண்டும்.
மேல்முறையீடு
இந்த அவகாசம் கடந்த நிலையில், மனுதாரர் அதே துறையில் மேலதிகாரியிடம், முதலாவது மேல்முறையீடு செய்யலாம். இதிலும் பதில் கிடைக்காத நிலையில், மாநில தகவல் ஆணையத்தில், இரண்டாவது மேல்முறையீட்டை தாக்கல் செய்யலாம்.
இவ்வாறு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களை பதிவு செய்து, வரிசைப்படுத்தி விசாரணை நடத்தி, மனுதாரருக்கு உரிய தீர்வு கிடைக்க செய்வதே, ஆணையத்தின் பணி.
ஆனால், சில ஆண்டுகளாக, மாநில தகவல் ஆணையர்கள், மனுதாரர்களை தொடர்ந்து அலைக்கழிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பிட்ட சில தகவல் ஆணையர்கள், சட்டத்தை மீறும் பொது தகவல் அலுவலர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக, தகவல் உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிலர், இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், பொது மக்கள் அளித்த மேல்முறையீடுகள் விசாரணைக்கு வர, எட்டு ஆண்டுகளுக்கு மேலாக தாமதம் ஏற்படுவதாக, தகவல் உரிமை ஆர்வலர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து, சென்னை பெரம்பூரை சேர்ந்த தகவல் அறியும் உரிமை ஆர்வலர் பி.கல்யாணசுந்தரம் கூறியதாவது:
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில், குறிப்பிட்ட சில தகவல்கள் கேட்டு, 2017ல் மனு செய்தேன். அதற்கு பொது தகவல் அலுவலரான, துறையின் சார்பு செயலர் உரிய தகவல்களை அளிக்கவில்லை.
இது தொடர்பாக, மாநில தகவல் ஆணையத்தில், அதே ஆண்டில் இரண்டாவது மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தேன். இந்த மனுவுக்கு மிக தாமதமாக, 2019ல் வரிசை எண் ஒதுக்கப்பட்டது.
அதன்பின், என் இரண்டாவது மேல்முறையீட்டு மனு, எட்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், வரும் 7ம் தேதி விசாரணைக்கு வருமாறு, ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
காலக்கெடு
ஒரு குறிப்பிட்ட தகவல்களை பெற, 30 நாட்கள் என காலக்கெடு இருக்கும் நிலையில், மேல்முறையீட்டு மனுவை வரைமுறையின்றி அதிகாரிகள் கிடப்பில் போடுவதால், சட்டத்தின் அடிப்படை நோக்கம் சிதைகிறது.
ஓரிரு ஆண்டுகள் தாமதம் என்றால் கூட பரவாயில்லை; ஒரு மனுவுக்கு, எட்டு ஆண்டுகள் தாமதம் என்பது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.