செக் மோசடி வழக்கில் பிடிவாரன்ட் நீதிமன்றத்தில் நடிகர் சீனிவாசன் சரண்
செக் மோசடி வழக்கில் பிடிவாரன்ட் நீதிமன்றத்தில் நடிகர் சீனிவாசன் சரண்
ADDED : மார் 12, 2024 02:30 AM

ராமநாதபுரம்: செக் மோசடி வழக்கில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நடிகர் சீனிவாசன் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று காலை சரணடைந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பிள்ளையார்கோவில் தெரு முனியசாமி 55. இறால் பண்ணை, உப்பளம் நடத்துகிறார். தொழிலை விரிவுப்படுத்தும் நோக்கில் ரூ.15 கோடி கடன் கேட்டு ராமநாதபுரம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் செப்., 2019ல் விண்ணப்பம் செய்தார். இதையறிந்த சிலர் நடிகர் சீனிவாசன் உதவியுடன் ரூ.15 கோடி வங்கிக் கடன் பெற்றுத்தருவதாக அழைத்துச் சென்றனர்.முனியசாமியிடம் பேசிய சீனிவாசன் கடன் பெற முத்திரைக் கட்டணமாக ரூ.15 லட்சம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து முனியசாமி கரூர் வைசியா வங்கியில் இருந்து சீனிவாசன் வங்கி கணக்கிற்கு ரூ.15 லட்சம் அனுப்பினார். அதன் பிறகு பல மாதங்களாகியும் வங்கி கடன் பெற்றுத்தரவில்லை. இதனால் கொடுத்த பணத்தை முனியசாமி திருப்பிக் கேட்டுள்ளார்.
அதற்கு சீனிவாசன் ரூ.14 லட்சத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி காசசோலை வழங்கினார்.வங்கியில் பணம் இல்லாமல் காசோலை திரும்பியது. முனியசாமி ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பலமுறை வாய்ப்பு அளித்தும் சீனிவாசன் ஆஜராகவில்லை.
இதனால் சீனிவாசனுக்கு மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று ராமநாதபுரம் முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சீனிவாசன் சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நிலவேஸ்வரன் வாரன்டை ரத்து செய்து வழக்கை தள்ளி வைத்தார்.------

