இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கை தயாரிக்க விஜய் திட்டம்
இலவசம் இல்லாத தேர்தல் அறிக்கை தயாரிக்க விஜய் திட்டம்
ADDED : ஆக 11, 2025 05:36 AM

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு, இலவசங்கள் இல்லாத தேர்தல் அறிக்கை தயாரிக்க, விரைவில் குழு அமைக்க, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள, சட்டசபை பொதுத் தேர்தலில், தன் தலைமையை ஏற்கும் கட்சிகளுடன், கூட்டணி அமைத்து போட்டியிட, விஜய் திட்டமிட்டுள்ளார்.
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு இணையாக, தமிழகம் முழுதும் பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமித்து, கட்சியை பலப்படுத்தி வருகிறார். வரும் 21ம் தேதி, மதுரையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு நடக்க உள்ளது. மாநாட்டின் பணிகள் குறித்து, மாநில நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போன்றோர் நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
வரும் சட்டசபை தேர்தலில், இலவசங்கள் இல்லாத, தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கையை தயாரிக்க, விஜய் விரும்புகிறார்.
இதற்காக, விரைவில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு அமைக்கப்பட உள்ளது. அதன்பின், தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் துவக்கப்படும்.
செப்., மாதத்தில் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை, விஜய் துவக்க உள்ளார். மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் கருத்துக்களை கேட்க உள்ளார். அவர்களின் குறைகளை கேட்டறிகிறார்.
மாவட்ட வாரியாக, மக்கள் பிரச்னைகள் குறித்து கட்சி நிர்வாகிகளை கேட்டறிந்து, அவற்றுக்கு தீர்வு காணும் வகையில், தேர்தல் அறிக்கையை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.