நடிகர் விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் தான்: செல்லுார் ராஜுவின் கணக்கு
நடிகர் விஜய் அரசியல் வருகை அ.தி.மு.க.,வுக்கு லாபம் தான்: செல்லுார் ராஜுவின் கணக்கு
ADDED : அக் 09, 2024 06:12 AM

மதுரை : ''நடிகர் விஜய் அரசியல் வருகையால், அ.தி.மு.க.,வுக்கு பயமில்லை; லாபம்தான்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான், தமிழகத்திற்கு விடிவு காலம் ஏற்படும். 'சென்னை ஏர் ஷோ' நிகழ்ச்சியில், ஐவர் இறந்ததற்கு தி.மு.க., அரசு பொறுப்பேற்று, ராஜினாமா செய்ய வேண்டும். ஐந்து பேர் இறந்த நிலையில், தன் தந்தை பெயரில், 46 கோடி ரூபாய்க்கு பூங்கா திறந்து, முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்கிறார்.
இங்கு குடிக்கவே கஞ்சி இல்லை. விலைவாசி, சொத்து வரி உயர்ந்துள்ளது. வரிக்குதிரையைக் காட்டிலும், தமிழகத்தில் வரி அதிகமாக உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்தியதாக, 19 மாணவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
நடிகர் விஜய் இப்போதுதான் மாநாடே நடத்த போகிறார். மக்கள் மத்தியில், எம்.ஜி.ஆருக்கு மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற எழுச்சி விஜய்க்கு இருக்குமா என்று தெரியாது.
அ.தி.மு.க.,வுக்கு விஜயை பார்த்து பயம் இல்லை. அவரது கட்சியில் முழுக்க முழுக்க, தி.மு.க.,வினர் தான் உள்ளனர். அதனால்தான், தி.மு.க., தலைவர்கள் விஜயை விமர்சிக்கின்றனர்.
பாவம், சின்ன பையன் விஜய். அவரும் வளர வேண்டாமா? நேற்று வரை சினிமாவில் ஆடிக்கொண்டிருந்த உதயநிதியை துணை முதல்வராக்குகிறீர்கள். அவர் என்ன தியாகம் செய்தார்?
விஜய் வருவதை ஏன் தடுக்கிறீர்கள்? அவரால், அ.தி.மு.க.,விற்கு பாதிப்பே இல்லை; லாபம்தான். தி.மு.க.,விற்கு உழைக்கிற சில இளைஞர்களும், த.வெ.க-.வுக்கு சென்று விடுவர். தி.மு.க.,வில் ஆர்.எஸ்.பாரதி போன்ற சீனியர் சிட்டிசன்கள்தான் இருப்பர். இவ்வாறு அவர் கூறினார்.