'தங்கலான், கங்குவா' வெளியீட்டுக்கு முன் தலா ரூ.1 கோடி டிபாசிட் செய்ய உத்தரவு
'தங்கலான், கங்குவா' வெளியீட்டுக்கு முன் தலா ரூ.1 கோடி டிபாசிட் செய்ய உத்தரவு
ADDED : ஆக 13, 2024 07:08 AM
சென்னை: நடிகர் விக்ரம் நடித்த, தங்கலான், நடிகர் சூர்யா நடித்த, கங்குவா படங்களை வெளியிடும் முன், தலா 1 கோடி ரூபாயை, 'டிபாசிட்' செய்ய வேண்டும் என, பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ், பலருக்கு கடன் கொடுத்துள்ளார். தொழிலில் நிதி இழப்பு ஏற்பட்டதால், திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டார்.
சொத்தாட்சியர்
பின், அவர் மரணம் அடைந்தார். அவரின் சொத்துக்களை, சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியர் நிர்வகித்து வருகிறார்.
சொத்தாட்சியர், அர்ஜுன்லால் சுந்தர்தாசிடம் கடன் பெற்றவர்களிடம் இருந்து, அந்த தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை துவக்கினார்.
கடன் பெற்றவர்களில், ஸ்டூடியோ கிரீன் பட தயாரிப்பு நிறுவன பங்குதாரர்களான ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரும் அடங்குவர். அவர்கள், 2013ல் 10.35 கோடி ரூபாய் கடன் பெற்றனர்.
வட்டியுடன் இந்த தொகையை திருப்பி செலுத்தக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், இருவரும் பணத்தை திருப்பி செலுத்தவில்லை.
இதையடுத்து, ஞானவேல்ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை, திவாலானவர்கள் என்று அறிவிக்க கோரி, உயர் நீதிமன்றத்தில் சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்தார்.
மனுவில், '10.35 கோடி ரூபாய் கடன் தொகைக்கு, 2013 முதல் 18 சதவீத வட்டி, வழக்கறிஞர் கட்டணம் என, மொத்தம், 26.34 கோடி ரூபாய் தர வேண்டும். இதை வழங்காத இவர்களை திவாலானவர்கள் என்று அறிவிக்க வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.
ஒப்புதல் பெற வேண்டும்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவு:
வரும் 14ம் தேதிக்குள், 1 கோடி ரூபாயை டிபாசிட் செய்து விட்டு, தங்கலான் படத்தை தயாரிப்பாளர் வெளியிடலாம். அதேபோல், கங்குவா படத்தை வெளியிடும் முன், 1 கோடி ரூபாயை டிபாசிட் செய்ய வேண்டும்.
பணம் டிபாசிட் செய்தது குறித்து, படவெளியீட்டுக்கு முன், உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து, ஒப்புதல் பெற வேண்டும். வரும், 14ம் தேதிக்குள் வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

