குரங்குடன் நடிகர் விக்ரம் 'வீடியோ' : சம்பந்தியிடம் வனத்துறை விசாரணை
குரங்குடன் நடிகர் விக்ரம் 'வீடியோ' : சம்பந்தியிடம் வனத்துறை விசாரணை
ADDED : ஆக 12, 2026 04:15 AM

சென்னை: 'லார் கிப்பன்' எனப்படும் அரிய வகை மனித குரங்குடன், நடிகர் விக்ரம் 'ரீல்ஸ்' வெளியிட்டதை அடுத்து, அவரது சம்பந்தி வீட்டில், வனத்துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.
'லார் கிப்பன்' எனப்படும் அரிய வகை சிறிய மனித குரங்குகள், மலேஷியா, மியான்மர், இந்தோனேஷியா, சீனா, தாய்லாந்து நாடுகளில் காணப்படுகின்றன.
இவை பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் பழக்கம் உடையவை. அரிதாக மட்டுமே தரையில் இறங்கி நடமாடும் இந்த வகை குரங்குகளை, வீடுகளில் வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
சிறிய அளவில் இருப்பதாலும், மனிதர்களின் பழக்கங்களை எளிதில் கற்றுக் கொள்வதாலும், இவற்றை வீடுகளில் வளர்க்க பலரும் விரும்புகின்றனர். இவற்றை வைத்து லாபம் சம்பாதிக்க நினைப்பவர்கள், இந்த வகை குரங்குகளின் தாயை கொன்று, குட்டிகளை கடத்தி விற்பனை செய்கின்றனர்.
அதிகபட்ச விலை கொடுத்து வாங்குவதற்கு போட்டி நிலவுவதால், இவ்வகை குரங்குகள் வேட்டையாடப்படுகின்றன. இதனால், இவை, அழிவின் விளிம்பில் உள்ள அரிய வகை உயிரினமாக பட்டியலிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிதாமகன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் விக்ரம், இந்த வகையைச் சேர்ந்த ஒரு குரங்குடன் விளையாடுவது போன்ற வீடியோ, சமூக வலைதள பக்கத்தில் வெளியானது.
தடை செய்யப்பட்ட விலங்கை, விக்ரம் தன் வீட்டில் வளர்க்கிறாரா என்பதை விசாரிக்க வேண்டும் என, வனத்துறைக்கு வன உயிரின ஆர்வலர்கள் புகார் செய்தனர்.
பறிமுதல் வன உயிரின ஆர்வலர்கள் கூறியதாவது:
மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் முத்துவின் மருமகன், தொழிலதிபர் சி.கே.ரங்கநாதன். இவர், நடிகர் விக்ரமின் சம்பந்தி. சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ரங்கநாதனின் வீட்டில், லார் கிப்பன் வகை குரங்கு வளர்க்கப்படுவதாக தெரிய வந்துள்ளது.
அங்கு சென்றபோது, நடிகர் விக்ரம், குரங்குடன் விளையாடி, அதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த வீட்டில், வனத்துறையினர் சோதனை நடத்தி, அரிய வகை விலங்கை பறிமுதல் செய்ய வேண்டும்.
மணிப்பூரைச் சேர்ந்த லைகுராம் என்பவர், மலேஷியாவில் இருந்து சில ஆண்டுகளுக்கு முன், லார் கிப்பன் வகையைச் சேர்ந்த எட்டு குரங்கு குட்டிகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இவற்றில் மூன்று குட்டிகள், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று தான், தற்போது விக்ரம் சம்பந்தி வீட்டில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நடவடிக்கை வனத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஈஞ்சம்பாக்கத்தில் தொழிலதிபர் ரங்கநாதன் வீட்டில், அரிய வகை லார் கிப்பன் வகை குரங்கு இருப்பதாக புகார் வந்துள்ளது. இது குறித்து விசாரிக்க, தமிழக தலைமை வன உயிரின பாதுகாவலர் ராகேஷ்குமார் டோக்ரா உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில், வனச்சரகர் ஒருவர் தலைமையில் வனத்துறையினர் நேற்று, ஈஞ்சம்பாக்கம் தொழிலதிபர் வீட்டில் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அந்த குரங்கு யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை, வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
