'ஏழைகளை பற்றி நடிகர்கள் சிந்திப்பதில்லை': அரசியலுக்கு வருவேன்: நடிகை அம்பிகா
'ஏழைகளை பற்றி நடிகர்கள் சிந்திப்பதில்லை': அரசியலுக்கு வருவேன்: நடிகை அம்பிகா
ADDED : ஆக 28, 2025 02:42 AM

சென்னை: ''நான் அரசியலுக்கு வருவேன்; குறை கூற முடியாத அரசியல்வாதியாக இருப்பேன்,'' என, நடிகை அம்பிகா கூறினார்.
சென்னை கண்ணகி நகரில், மின்சாரம் தாக்கி பலியான துாய்மை பெண் பணியாளர் வரலட்சுமியின் குடும்பத்தினரை, நடிகை அம்பிகா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். பின் அவர் அளித்த பேட்டி:
தினமும் நான் பயப்படுவது மின்வாரியத்தை நினைத்து தான். ஒரு முறை ஷூட்டிங் முடித்து வீடு திரும்பும்போது, சென்னை ராமாபுரத்தில் மின்கம்பி அறுந்து கிடந்தது.
மின்வாரிய அதிகாரியிடம் தகவல் தெரிவித்து, மின் இணைப்பை துண்டிக்க கூறியபோது, அவர், 'என் ஏரியா இல்லை' என அலட்சியமாக பதில் கூறினார். அடுத்த நிலை அதிகாரியிடம் கூறி, விபரீதத்தை தடுக்கும் உணர்வு அந்த அதிகாரிக்கு இல்லை.
எனக்கு பவர் கிடைத்தால், மேஜிக் போல், சேதமடையும் மின் கம்பிகள் இருக்கும் இடத்தில் மின் இணைப்பை துண்டித்து விடுவேன்.
மின் வாரியத்தின் அலட்சியத்தால் தான், துாய்மை பணியாளர் வரலட்சுமி பலியானார். மனிதாபிமானம் அடிப்படையில் தான், அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்தேன்.
இதர நடிகர் - நடிகையர் இங்கு வராதது வருத்தம் தான். போஸ்டர் ஒட்டவும், டிக்கெட் எடுக்கவும் மட்டுமே, இந்த மக்கள், நடிகர்களுக்கு தேவையாக உள்ளனர். அதனாலேயே, இந்த மக்களின் சுக, துக்கங்களில் பங்கெடுப்பதில்லை. 'ஏசி' அறையில் இருக்கும் நடிகர்களுக்கு, ஏழைகளின் கஷ்டங்கள் புரியாது.
'தாங்கள் படும் துன்பங்களை துடைக்காவிட்டாலும், ஆறுதலாக இருக்காத நடிகர்களின் படங்களை பார்க்க மாட்டோம்' என ஏழைகள் முடிவெடுத்தால், நடிகர்கள் பாடு திண்டாட்டமாகி விடும்.
இவ்வளவு துாரம் பேசுகிறீர்களே... நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா என கேட்டால், கண்டிப்பாக வருவேன். ஆனால், மக்கள் குறை கூற முடியாத அரசியல்வாதியாக இருப்பேன்.
இவ்வாறு கூறினார்.