நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
நடிகை சரோஜாதேவி மறைவு : முதல்வர், இபிஎஸ், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல்
UPDATED : ஜூலை 14, 2025 03:27 PM
ADDED : ஜூலை 14, 2025 01:11 PM

‛கன்னடத்து பைங்கிளி'-யான நடிகை சரோஜா தேவியின் மறைவு தென்னிந்திய திரையுலகினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூருவின், மல்லேஸ்வரத்தில் உள்ள அவரது இல்லத்தில் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்துகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின், அதிமுக., பொதுச் செயலாளர் இபிஎஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், நடிகர் ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின்
'தென்னிந்தியத் திரையுலகின் பழம்பெரும் நடிகையான திருமதி சரோஜாதேவி , மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதிமுக., பொதுச் செயலாளர் இபிஎஸ்
பழம்பெரும் திரைப்பட நடிகை 'அபிநய சரஸ்வதி' என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் திருமதி. சரோஜா தேவி காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பன்மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தனது தனித்துவமிக்க நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கவர்ந்தவர் சரோஜா தேவி. எம்ஜிஆர் உடன் சரோஜா தேவி இணைந்து நடித்த திரைப்படங்கள் யாவும் காலத்தால் அழியாப் புகழ் பெற்றவை. 'சரோஜா தேவி' எனும் பெயர் அப்படங்கள் வாயிலாக என்றென்றைக்கும் உச்சரிக்கப் பட்டுக்கொண்டே இருக்கும்.
அம்மா அவர்களின் பேரன்பைப் பெற்ற சரோஜா தேவியை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ரஜினிகாந்த்
பல கோடி ரசிகர்களின் மனம் கவர்ந்த மாபெரும் நடிகை சரோஜாதேவி இப்போது நம்முடன் இல்லை. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.
குஷ்பு
ஒரு பொற்கால திரையுலக யுகம் முடிவுக்கு வந்தது. சரோஜாதேவி அம்மா எல்லா காலத்திலும் மிகப்பெரிய நடிகையாக இருந்தவர். தென்னிந்தியாவில் வேறு எந்த பெண் நடிகையும் அவரைப் போல் புகழையும் பெயரையும் பெறவில்லை. அவர் மிகவும் அன்பான, அழகான ஆன்மா. அவருடன் மிக நல்ல உறவு இருந்தது. பெங்களூரு பயணித்தால் அவரைச் சந்திக்காமல் முழுமையடையாது. சென்னையில் இருக்கும்போது, அவர் அழைப்பார். அவரை மிஸ் செய்கிறேன். அம்மா, அமைதியாக ஓய்வெடுங்கள்.
சிம்ரன்
புகழ்பெற்ற சரோஜா தேவி அம்மா இனி இல்லை. ஆனால் இந்திய திரையுலகில் அவரது மரபு என்றென்றும் நிலைத்திருக்கும். 'ஒன்ஸ் மோர்' படத்தில் அவருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது எனக்கு கிடைத்த பாக்கியம். இன்று அது மேலும் விலைமதிப்பற்றதாக உணர்கிறேன். அம்மாவிற்கு எனது ஆழ்ந்த மரியாதையும், பிரார்த்தனைகளும். அவரது ஆன்மா அமைதியடையட்டும். ஓம் சாந்தி.
கவுதமி
இன்று நாம் ஒரு ஜாம்பவானையும், உண்மையான சினிமா ஐகானையும் இழந்துவிட்டோம். சரோஜா தேவி அம்மா, தனது நளினம், நடிப்பு மற்றும் அழகால் பல தலைமுறை நடிகைகளால் வணங்கப்பட்டு, பின்பற்றப்பட்டவர். அவரது அழகிய தோற்றம், அற்புதமான ஆளுமை மற்றும் மின்னும் புன்னகை பார்வையாளர்களை மயக்கியது. அவர் ஒரு நீடித்த பாரம்பரியத்தை உருவாக்கியுள்ளார். ஒரு முன்னோடி நடிகையாக அவரது அற்புதமான சாதனைகளுக்கு முன்னால் நான் தலைவணங்குகிறேன். அவரது மறைவை இதயத்தை கனக்க செய்கிறது. அவரது ஆன்மா அமைதியாக ஓய்வெடுக்கட்டும். ஓம் சாந்தி
விக்ரம் பிரபு
திரைப்படங்களில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் நளினம், அழகு மற்றும் நல்ல மனதுடன் விளங்கியவர் சரோஜா தேவி. தனித்துவமான நடிகையாக, தனது அற்புதமான திரைப்படப் படைப்புகள் மற்றும் தனிப்பட்ட முறையில் மனங்களைத் தொட்டவர்களால் நினைவுகூறப்படுவார். பல சந்தர்ப்பங்களில் அவருடன் பழகியதை பாக்கியமாக கருதுகிறேன். ஓய்வெடுங்கள் நடிகை சரோஜாதேவி!
ராதிகா சரத்குமார்
சரோஜாதேவி பற்றி ஏராளமான நினைவுகள் என்னுள்ளே... அவரின் மறைவு குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். ஒரு உண்மையான சூப்பர் ஸ்டார். சுயமாக உருவான பெண்ணின். பலருக்கு அவர் உத்வேகம். அவரின் அற்புதமான படைப்புகளுடன் எப்போதும் வாழ்ந்திருப்பார்.