ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில் கலெக்டரும் சேர்ப்பு
ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு வழக்கில் கலெக்டரும் சேர்ப்பு
ADDED : அக் 26, 2024 07:05 AM
சென்னை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரியின் பின் பகுதி வழியாக, கழிவுநீர் கலக்கிறது. ஏரியைச் சுற்றிலும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகின.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ஆவடி மாநகராட்சி உள்ளிட்ட, சம்பந்தப்பட்ட அரசு அமைப்புகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோரது உத்தரவு:
புழல் ஏரியை சுற்றிலும் கழிவுநீர் கலப்பது, குப்பை கொட்டுவது தொடர்பாக தீர்ப்பாயம் உத்தரவிட்டும், குடிநீர் வாரியம் அறிக்கை தாக்கல் செய்யவில்லை.
புழல் ஏரியின் பின்புறம் உள்ள வெங்கடேஸ்வரா நகர், பானு நகரில் தண்ணீர் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளதாக, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
புழல் ஏரியைச் சுற்றிலும் நீர்வழித்தடங்களில், 41 இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில், பொன்னேரி வருவாய் துறையினர் அலட்சியம் காட்டுவதாகவும், அக்., 22ல், 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
எனவே, இந்த வழக்கில் திருவள்ளூர் கலெக்டரையும் இணைக்கிறோம். புழல் ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அடுத்த விசாரணை வரும் ஜனவரி 20ல் நடக்கும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.