கூடுதல் மருத்துவர்கள் கரூருக்கு விரைய உத்தரவு; கட்டணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க ஆணை
கூடுதல் மருத்துவர்கள் கரூருக்கு விரைய உத்தரவு; கட்டணம் வாங்காமல் சிகிச்சை அளிக்க ஆணை
UPDATED : செப் 28, 2025 06:36 AM
ADDED : செப் 27, 2025 10:00 PM

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனைக்கு நேரில் சென்று தேவையான மருத்துவ உதவிகளை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது; அரசியல் கட்சி கூட்டத்திற்கு சென்றவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் அரசு மாவட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் நடந்த உடனே முதல்வர் ஸ்டாலின், கலெக்டர், போலீஸ் உயரதிகாரிகளுக்கும், எனக்கும் தொடர்பு கொண்டு, உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று கூடுதல் மருத்துவர்களை வரவழைத்து, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சுப்பிரமணியன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். நாளை (செப்.,28) காலை முதல்வர் ஸ்டாலின் கரூர் வருகிறார்.
46 பேர் தனியார் மருத்துவமனையிலும்,12 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். நம் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் பணிக்கு வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர். கூடுதலாக நாமக்கல், சேலம் மாவட்ட மருத்துவர்கள் வரவழைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றிரவே, அவர்கள் சிகிச்சை அளிக்க வருகின்றனர். தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் உள்ளன.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்த்தோம். உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவர்களையும் சந்தித்து பேசியுள்ளோம். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு கட்டணம் ஏதும் வாங்க வேண்டாம். தகுந்த சிகிச்சையை கொடுத்து வருகின்றனர். கலெக்டர், போலீஸ் அதிகாரிகள் நேரில் இருந்து உரிய சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க முதல்வரின் உத்தரவிட்டுள்ளார்.
குழந்தைகள், பெண்கள் உள்பட மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். கூடுதலாக உயிர்ச்சேதம் ஏற்படாத அளவுக்கு விரைந்து சிகிச்சை அளித்து வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.