கரூரில் கூட்ட நெரிசலால் துயரச்சம்பவம்; ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட தலைவர்கள் வேதனை
கரூரில் கூட்ட நெரிசலால் துயரச்சம்பவம்; ஜனாதிபதி, பிரதமர், உள்ளிட்ட தலைவர்கள் வேதனை
UPDATED : செப் 29, 2025 05:46 AM
ADDED : செப் 27, 2025 10:29 PM

சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தேர்தல் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று கரூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜனாதிபதி, திரவுபதி முர்மு
கரூர் மாவட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயரச் செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
பிரதமர் மோடி
கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் வருத்தமளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு வலிமை கிடைக்கவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்.
பாதுகாப்புத்துறை அமைச்சர், ராஜ்நாத் சிங்
கரூரில் நேரிட்ட கோர உயிரிழப்பு சம்பவத்தால் மிகுந்த வருத்தமடைந்தேன்.நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக பாஜ தலைவர், நயினார் நாகேந்திரன்
கரூரில் நடந்த அரசியல் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.தமிழக பாஜவின் மூத்த தலைவர்களை மருத்துவமனைக்கு விரைந்து, பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் செய்திட கேட்டுக்கொண்டுள்ளேன். கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாஜ மாவட்ட தலைவரையும் உடனடியாக தேவையான உதவிகளை செய்து தருமாறும் அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கிட அரசை வலியுறுத்துகிறேன்.
அதிமுக பொதுச்செயலாளர், இபிஎஸ்
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் அதன் தலைவர் விஜய் பேசுகையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்ததாகவும், மற்றும் பலர் மயக்கமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது .
உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், எனது அறிவுறுத்தலின்படி, மருத்துவமனை உள்ள பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதால் அதிமுக தொண்டர்கள் மனிதச் சங்கிலி அமைத்து, சிகிச்சை பெறுவோருக்கான உரிய உதவிகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு மேற்க்கொள்ளவும்,உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வலியுறுத்துகிறேன்.
தமிழக பாஜ முன்னாள் தலைவர், அண்ணாமலை
கரூரில், தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு போலீசாரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. விஜய் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், போலீசாரும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த போலீசாரை அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
நடிகர், ரஜினிகாந்த்
கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகர், கமல்
நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.
நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
ராகுல் இரங்கல்
கரூரில் நடந்த துயரச் சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்த அனைவரும் விரைவில குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை வழங்க காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன்.
அமித்ஷா இரங்கல்
தமிழகத்தின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த துயர சம்பவத்தால் ஆழ்ந்த வேதனை அடைகிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த துயரத்தைத் தாங்கும் வலிமையையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். - ஊள்துறை அமைச்சர் அமித்ஷா