ADDED : டிச 11, 2024 12:00 AM
தமிழக மின்வாரியம், 2020 - 21ல், 30,000 கி.மீ., அலுமினிய கலப்பு உலோக மின்கம்பி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வெளியிட்டது.
ஒரு தனியார் நிறுவனம், 1 கி.மீ., கம்பிக்கு, 23,815 ரூபாய் என்ற குறைந்த தொகையை கோரியது. இந்நிறுவனம், 3,000 கி.மீ., மட்டுமே வழங்க முடியும் என்பதால், விலை புள்ளியில் தேர்வான மற்ற நிறுவனங்களிடம், இதே விலைக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டது.
மொத்தம் 22 நிறுவனங்களில் 17, அந்த விலைக்கு வழங்க ஒப்புக்கொண்டன. ஆனால், அந்நிறுவனங்கள், 70 நாட்கள் அவகாசம் உள்ள நிலையில், 45 நாட்களுக்குள் பணம் வழங்குமாறு கோரின. ஒப்பந்தம் செல்லுபடியாகும் காலம், 2021 ஜூனுக்கு பதில், ஆக., 31 வரை நீட்டிக்கப்பட்டது.
இதை, செப்., 30 வரை நீட்டிக்குமாறு நிறுவனங்களுக்கு, மின்வாரியம் கோரிக்கை வைத்தது. அதை அந்நிறுவனங்கள் ஏற்கவில்லை. இதனால், ஒப்பந்தப்புள்ளி ரத்து செய்யப்பட்டது. பின், 60,000 கி.மீ., மின்கம்பி வாங்க, மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில், ஜார்க்கண்ட் நிறுவனத்தின் விலையான, 1 கி.மீ.,க்கு 42,834 ரூபாய் இறுதி செய்யப்பட்டது. முதல் ஒப்பந்த புள்ளியில் இறுதி செய்யப்பட்ட விலை, 23,815 ரூபாயாக இருந்தது.
அதே சமயம், புதிய ஒப்பந்தப்புள்ளியில், 42,834 ரூபாய் இறுதி செய்யப்பட்டது. இதனால் மின் வாரியத்துக்கு, 30,000 கி.மீ.,க்கு, 57 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.