ADDED : மார் 19, 2024 11:08 PM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரி வீதியில் கூடுதல் கண்காணிப்பு கேமரா, தெரு விளக்குகளை பொருத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
சென்னை ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த மனு: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் ஆக்கிரமிப்புகளால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.
ஆக்கிரமிப்புகளை அகற்ற 2018ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை நிறைவேற்றாததால் அப்போதைய கலெக்டர் வினய் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
ஏற்கனவே விசாரித்த நீதிபதிகள் அமர்வு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வி.பாரதிதாசன் தலைமையில் குழு அமைத்தும், அரசு தரப்பில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அறிக்கை அடிப்படையில் அவ்வப்போது நீதிபதிகள் அமர்வு உத்தரவு பிறப்பிக்கிறது.
நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: கிரி வீதியில் 150 பேர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். அவர்களுக்கு தரைவாடகை அடிப்படையில் மாற்று இடம் ஒதுக்க பரிசீலிக்க வேண்டும்.
அதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்காவிடில் அப்புறப்படுத்த வேண்டும். கூடுதல் தெரு விளக்குகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாதவாறு தடுப்புகள் அமைக்க வேண்டும்.
கிரி வீதி அருகே நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தற்காலிக வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்த பரிசீலிக்க வேண்டும்.
சன்னதி தெரு, அய்யம்புள்ளி தெரு, பூங்கா ரோடு பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்க வேண்டும். கூடுதல் போலீசார், ஊர்க்காவல் படையினரை பாதுகாப்பில் ஈடுபடுத்த வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு ஒத்திவைத்தனர்.

