ADDED : ஜூன் 27, 2025 03:20 AM
சென்னை:ஆனி மாத சுபமுகூர்த்த தினத்தையொட்டி, சார் பதிவாளர் அலுவலகங்களில், இன்று கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
சுபமுகூர்த்த தினங்களில், கூடுதல் பத்திரங்கள் பதிவு செய்யப்படும் என்பதால், அன்றைய தினங்களில், பதிவுக்கு கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்படும். ஆனி மாதத்தில் வரும் சுப முகூர்த்த தினமான இன்று, அதிக அளவில் பத்திரப் பதிவுகள் நடக்கும்.
எனவே, இன்று ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகத்தில், 10-0க்கு பதில், 150 டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர் உள்ள அலுவலகத்தில், 200க்கு பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படும். அதிக அளவில் பத்திரப் பதிவு நடக்கும், 100 அலுவலகங்களில், 100க்கு பதில் 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களும் வழங்கப்படும்.
மேலும், ஏற்கனவே வழங்கப்படும் 12 தத்கால் முன்பதிவு டோக்கன்களுடன், கூடுதலாக நான்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.