ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இரு முறைக்கு மட்டுமே அனுமதி
ரேஷன் கார்டில் முகவரி மாற்றம் இரு முறைக்கு மட்டுமே அனுமதி
ADDED : நவ 06, 2025 12:53 AM
சென்னை: 'ரேஷன் கார்டில் முகவரி மாற்றம், உறுப்பினர் சேர்த்தல் உட்பட நான்கு சேவைகளுக்கு, இனி ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்' என, உணவு வழங்கல் துறை அறிவித்து உ ள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை உணவு பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க, ரேஷன் கார்டு அவசியம்.
கார்டை பெற, தனி சமையல் அறையுடன் வசிப்பவர், 'ஆதார்' எண்ணுடன் உணவு வழங்கல் துறையின், பொது வினியோக திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த இணையதளத்தின் வாயிலாக, ரேஷன் கார்டில் உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், குடும்ப உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பம்
கார்டுதாரர்கள், தேவைக்கு ஏற்ப, எத்தனை முறை வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். அதை அதிகாரிகள் பரிசீலனை செய்து, ஒப்புதல் தருவர்.
இந்நிலையில், உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகளுக்கு, ஆண்டுக்கு இருமுறை மட்டுமே விண்ணப்பிக்கும் சேவையை உணவுத் துறை அமல்படுத்தியுள்ளது.
பதிவிறக்கம்
அதன்படி, மேற்கண்ட ஒவ்வொரு சேவைக்கும் ஜனவரி முதல் ஜூன் வரை ஒரு முறையும், ஜூலை முதல் டிசம்பர் வரை ஒரு முறையும் மட்டுமே, விண்ணப்பிக்க முடியும். ஆவணங்களை பதிவிறக்கம் செய்ய முடியும்.
இது குறித்து, உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விபரம்:
ரேஷன் கார்டில் மாற்றங்கள் மேற்கொள்ள, உறுப்பினர் சேர்த்தல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் மாற்றம், உறுப்பினர் நீக்கம் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டுஉள்ளன.
இந்த சேவைகளை முறைப்படுத்த, ஆண்டுக்கு இருமுறை விண்ணப்பிக்க அனுமதி, ஆவணம் பதிவிறக்க அனுமதி அளிக்கும் வகையில், மென்பொருளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

