மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை; அமைச்சர் சொல்றத நோட் பண்ணுங்கப்பா!
மதுக்கடைகளை நடத்துவதில் முதல்வருக்கு எள்ளளவும் விருப்பமில்லை; அமைச்சர் சொல்றத நோட் பண்ணுங்கப்பா!
UPDATED : செப் 12, 2024 12:06 PM
ADDED : செப் 12, 2024 12:03 PM

ஈரோடு: 'டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்று தான் முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார்' என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுவிலக்கு வருமா என்பது குறித்து, அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவோம். டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்த முதல்வர் ஸ்டாலினுக்கு எள்ளளவும் விருப்பமில்லை. டாஸ்மாக் கடைகளை என்றாவது ஒருநாள் மூட வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலின் நினைக்கிறார். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுத்தால் என்ன ஒரு சூழல் உருவாகும் என எல்லோருக்கும் தெரியும்.
நடவடிக்கை
இங்குள்ள சூழலை பொறுத்து தான், அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும். எனவே நிச்சயமாக ஒரு கால கட்டத்தில் மக்களை மதுவிலிருந்து வெளியே கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஒரே நாளில் உத்தரவு போட்டு மதுக்கடைகளை மூடி விடலாம். உடனடியாக மூடினால் என்ன நடக்கும் என்பதை ஆராய்ந்து தான் நடவடிக்கை எடுக்க முடியும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்கை ரீதியான முடிவு
விடுதலை சிறுத்தை கட்சியை பொறுத்தவரை, அவர்கள் அவர்களுடைய கொள்கை ரீதியான முடிவிற்காக மாநாடு நடத்துகிறார்கள். இது முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசை எதிர்த்து போராடுகிறார்கள் என்பது அல்ல. கல்யாணத்திற்கு அழைப்பு கொடுக்கிறார்கள்.எதிரிகளுக்கு கூட தான் அழைப்பு விடுக்கிறோம். வி.சி.க., மாநாட்டில் அதிமுக பங்கேற்கலாம் என பொதுவான அழைப்பை தான் திருமாவளவன் விடுத்துள்ளார். முதல்வர் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் நடப்பவற்றை தொடர்ந்து கவனித்து வருகிறார். இவ்வாறு முத்துசாமி கூறினார்.