மீன்வள துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ரூபாலா
மீன்வள துறைக்கு போதிய நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் ரூபாலா
ADDED : ஜன 02, 2024 12:34 AM

சென்னை: ''மீன்வளத் துறையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு, தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது,'' என, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.
மீனவர்களை சந்தித்து கலந்துரையாடுதல், மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தல், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, 'சாகர் பரிக்ரமா' என்ற திட்டத்தை, மத்திய அரசு, 2022ம் ஆண்டு மார்ச்சில், குஜராத் மாநிலம், மாண்டவியில் துவங்கியது.
கடல் பயணம்
இத்திட்டத்தின்படி, மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா, கடல் வழியாக பயணம் மேற்கொண்டு பல்வேறு மாநில மீனவ கிராமங்களுக்குச் சென்று, குறைகளை கேட்டு அறிந்து வருகிறார்.
அந்த வகையில், 9வது கட்ட கடல் பயணத்தில் சென்னை காசிமேடு, எண்ணுார் பகுதிகளில், மீனவ மக்களை சந்தித்தார். 10வது கட்ட பயணத்தை சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று துவங்கினார்.
சென்னையில் இருந்து ஆந்திரா மாநிலம் நெல்லுாருக்கு புறப்பட்டார்.
அவரை மத்திய மீன்வளம், கால்நடை இணை அமைச்சர் முருகன், சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, மத்திய அமைச்சர் புருஷோத்தம் ரூபாலா கூறியதாவது: 'சாகர் பரிக்ரமா' என்ற திட்டத்தில் கீழ், கடல் மார்க்கமாக மீனவர்களை சந்தித்து, கருத்து கேட்டு வருகிறோம். தமிழக மீனவர்களையும் சந்தித்து கருத்து கேட்டோம்.
அடுத்து, மீன் வளத்துறையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா முதலிடம்
மத்திய இணை அமைச்சர் முருகன் கூறியதாவது: மீன் வளத்துறைக்காக தனியாக ஒரு துறையை மத்திய அரசு 2019ல் துவங்கியது. இத்துறைக்கு, 10 ஆண்டுகளில் 38,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, உலகிலேயே இறால் உற்பத்தியில் இந்தியா முதலிடத்திலும், கடல்சார் பொருட்கள் ஏற்றுமதியில், 4வது இடத்திலும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

