ADDED : ஏப் 01, 2025 09:36 PM
சென்னை:த.வெ.க., தேர்தல் பிரசார செயலர் ஆதவ் அர்ஜுனா, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததை, அவரது மைத்துனர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கண்டித்துள்ளார்.
அவரது அறிக்கை
தமிழக மக்களின் நலனுக்காக, அயராது பாடுபடும், பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு எதிராக, ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு, என் எதிர்ப்பையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'அவர் தன் மாமனார் பணத்தை, அதாவது என் தந்தையின் பணத்தை தவறாக பயன்படுத்துகிறார். எங்கள் குடும்பத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கிறார்' என, அண்ணாமலை பேசியதை ஆதரிக்கிறேன்.
பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி வைத்து, தன் அரசியல் மற்றும் பொருளாதார பேராசையை தீர்த்து கொள்ள, பல கட்சிகளில் இணைந்து வருகிறார். அவர் செய்யும் முட்டாள்தனத்துக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவரது செயலால், மேலும் ஏதேனும் விளைவுகள் ஏற்பட்டால், நீதிமன்றத்தை அணுகி, என் நற்பெயரை பாதுகாக்க தேவையான, அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

