ADDED : ஜன 29, 2025 06:58 PM

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜூனா, த.வெ.க., தலைவர் விஜய்யை, இன்று சந்தித்து பேசியுள்ளார். விஜய் கட்சியில் அவர் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஜய்யின் த.வெ.க.,தொடங்கி ஓராண்டை எட்ட உள்ள நிலையில், கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நிர்வாகிகளை நிரப்புவதில் அதீத கவனம் செலுத்தி வருகிறார். தன்னுடைய முதல் அரசியல் மாநாட்டில் ஆட்சியில் சம பங்கு எனப் பேசியதைத் தொடர்ந்து, அவரது கருத்தை வி.சி.க.,வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜூனா வரவேற்றார். கட்சித்தலைமையின் எண்ணத்துக்கு மாறாக, தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்து வந்தார்.இதனால், தி.மு.க., மற்றும் வி.சி.க., இடையே மோதல் சூழல் உருவானதை தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், த.வெ.க., தலைவர் விஜய்யை, அவரது பனையூர் அலுவலகத்தில் இன்று ஆதவ் அர்ஜூனா சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அவர் த.வெ.க.,வில் இணைய இருப்பதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. இது தொடர்பாக விஜய் ஓரிரு நாட்களில் அறிவிப்பை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. த.வெ.க.,வின் தேர்தல் பணிகளை ஆதவ் அர்ஜூனாவின் நிறுவனத்திற்கு வழங்க விஜய் முடிவெடுத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியே வந்தால் மட்டுமே உண்மை தெரிய வரும்.
ஆதவ் அர்ஜூனா யார்
பிரபல லாட்டரி நிறுவன உரிமையாளர் மார்ட்டினின் மருமகன் தான் இந்த ஆதவ் அர்ஜூனா. மார்ட்டின் மகளை திருமணம் செய்துள்ளார். விளையாட்டு அமைப்பு ஒன்றில் பொறுப்பு வகிக்கிறார். தேர்தல் வியூகம் வகுக்கும் நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.