அன்பால் இணைத்தவர் ஆதிசங்கரர்: தமிழருவி மணியன் சொற்பொழிவு
அன்பால் இணைத்தவர் ஆதிசங்கரர்: தமிழருவி மணியன் சொற்பொழிவு
ADDED : பிப் 17, 2024 02:34 AM

கோவை;'' நம் நாட்டில் அனைவரும் சமம். ஆகவே இந்த நாட்டை அன்பு என்ற தத்துவத்தால் இணைத்தது ஆதிசங்கரர்,'' என்று தமிழருவி மணியன் பேசினார்.
சிருங்கேரி சாரதா பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா சுவாமிகள் துறவறம் பெற்று, ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, பொன்விழா ஆண்டு, சங்கர விஜய திருவிழாவாக கோவையில்கொண்டாடப்படுகிறது.
ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் திருமணமண்டபத்தில், இரு தினங்களுக்கு முன்பு விழா துவங்கியது. மூன்றாம் நாளான நேற்று நடந்த சொற்பொழிவில், சொற்பொழிவாளர் தமிழருவி மணியன் பேசியதாவது:
நம் தேசத்தின் அடிப்படை வேதங்கள், உபநிஷத்துகள். அவை எந்த காலத்திற்கும் பொருந்தும். பிளேட்டோ, அரிஸ்டாட்டில் கிரேக்க நாட்டிலிருந்து தத்துவம் சொன்னதாக சொல்கின்றனர். ஆனால் அதற்கு முன்னதாக, 3,500 ஆண்டுக்கு முன்பே, உபநிஷத்துக்கள் தோன்றிவிட்டன.
அந்த கருத்துக்களை, மிக எளிதாக எல்லோரும் அறியும்படி செய்தவர் ஆதிசங்கரர். அந்த காலத்திலேயே, குரு - சிஷ்யர் நடைமுறையை உருவாக்கி, கேள்வி கேட்கும் உரிமையும் பதிலளிக்கும் பண்பும் இருந்தது. அதனால்தான், குருகுல கல்வி பிரபலமடைந்தது. பெண்களுக்கு மரியாதை, பொறுப்பு வந்தது.
யாக்ஞவல்கரின் மனைவி மைத்ரேயி, அந்த காலத்திலேயே கேள்வி கேட்டு பதில் பெற்றிருக்கிறார். பெண்ணுக்கு பொறுப்பு, கல்வி, உரிமை எல்லோருக்கும் கல்வி என்று, வெள்ளைக்காரன் கொண்டு வந்ததாக, மூடநம்பிக்கையை வைத்திருக்கிறோம்.
அனைவரும் ஒன்றே என்பதுதான் ஆதிசங்கரர் சொன்னது. ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆத்மா, எல்லோருக்கும் சமமானது.
நிலவின் ஒளி கங்கையில் பட்டாலும் நிலவுதான்; தேங்கியிருக்கும் குட்டையில் தெரிந்தாலும் நிலவுதான். அதே போல், அத்வைதம் என்பது ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் ஒன்றே.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தெய்வம் உள்ளது. எல்லோருமே தெய்வம் என்றால், அங்கே வேறுபாடு என்ற சொல்லே இல்லை.
அனைவரும் சமம். ஆகவே இந்த நாட்டை, அன்பு என்ற தத்துவத்தால் இணைத்தது ஆதிசங்கரர்தான்; ஆங்கிலேயன் அல்ல. இவ்வாறு, அவர் பேசினார். திரளானோர் பங்கேற்றனர்.