ADDED : பிப் 22, 2024 02:34 AM
சென்னை:வேலைக்கார இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தி.மு.க., -- எம்.எல்.ஏ.,வின் மகள், மருமகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு தள்ளி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் பதில் அளிக்க அவகாசம் கேட்டதால், விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
சென்னை, பல்லாவரம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கருணாநிதியின் மகன் ஆன்டோ மதிவாணன் வீட்டில் பணிபுரிந்த இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக, ஆன்டோ, அவரது மனைவி மெர்லினா ஆகியோருக்கு எதிராக, நீலாங்கரை போலீசார் வழக்கு பதிந்தனர்.
இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஆதிதிராவிடருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ், வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஜாமின் கோரி, இருவரும், உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இம்மனு, நீதிபதி நிர்மல்குமார் முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
இருவர் சார்பிலும், மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, ''தவறான புகாரில், இருவரும் கைது செய்யப்பட்டு, 30 நாட்களாக சிறையில் உள்ளனர்,'' என்றார்.
பாதிக்கப்பட்ட பெண் ஆஜராகி, ஜாமின் மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் கோரினார். இதையடுத்து, விசாரணையை, நாளைக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.