அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு
அரசு பள்ளிகளில் சேர்க்கை மார்ச் 1ல் துவக்க உத்தரவு
ADDED : பிப் 20, 2025 02:28 AM
சென்னை:'அரசு பள்ளிகளில், வரும் 2025 -- 26ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை, மார்ச் 1 முதல் துவக்க வேண்டும்' என, பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
அவர் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
அரசு பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பது குறித்து, மாவட்டக் கல்வி அதிகாரிகள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக, தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்போது, அங்கன்வாடி மையங்களில், முன்பருவ கல்வியை முடித்த, ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, அரசு பள்ளிகளில் சேர்க்க, பெற்றோரிடம் அறிவுறுத்த வேண்டும்.
மற்ற பள்ளிகளில் இருந்து, அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோருக்காக, உரிய சேர்க்கை இடங்களை ஒதுக்க வேண்டும். புதிதாக சேரும் மாணவர்களின் விபரங்களை, 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

