அ.தி.மு.க., - மா.செ., மீது நீக்கப்பட்ட நிர்வாகி புகார்
அ.தி.மு.க., - மா.செ., மீது நீக்கப்பட்ட நிர்வாகி புகார்
ADDED : பிப் 19, 2024 12:04 AM
சேலம் : சேலம், அழகாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜூ, 60; சேலம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலராக இருந்தார். நேற்று முன்தினம் அவரை கட்சி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி, பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இதையடுத்து, ராஜூ சேலத்தில் நேற்று கூறியதாவது:
என்னை கட்சியில் இருந்து நீக்கியது செல்லாது. பழனிசாமி பால் பண்ணை தலைவராக இருந்தபோது, நான் இயக்குனராக இருந்ததால் அவர் செய்த ஊழல் அனைத்தும் தெரியும். வெறும், 300 சதுரடி சொத்து வைத்திருந்த, சேலம் மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், தற்போது பல கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து, அ.தி.மு.க.,வை ஏமாற்றி வருகிறார்.
என்னிடமும், வெங்கடாஜலம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக, பழனிசாமியிடம் 2022 முதல் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து வெங்கடாஜலம் கூறுகையில், ''கட்சியில் இருந்த நீக்கப்பட்ட ராஜூ, என் மீது தெரிவிக்கும் குற்றச்சாட்டு, 100 சதவீதம் உண்மைக்கு புறம்பானது.
என்னிடம் பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகத் தயார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

