ADDED : மார் 18, 2024 01:29 AM

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, பீரங்கிமேடை சேர்ந்தவர் வெங்கடேசன், 47; அ.தி.மு.க., நகர செயலர். செஞ்சி அடுத்த காரை கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 44. செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் டீக்கடை நடத்தி வருகிறார்.
இருவருக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு, வெங்கடேசன், திருவண்ணாமலை சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க வந்தார்.
அங்கிருந்த ராஜேந்திரன், அவரது மனைவி கல்பனா, 35, வெங்கடேசனிடம் பணம் கேட்டு தகராறு செய்து, அங்கு கிடந்த மரக்கட்டை, கல்லால் வெங்கடேசனை தாக்கினர். வெங்கடேசன் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கினார்.
செஞ்சி போலீசார், வெங்கடேசனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பினர். வெங்கடேசன் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் ராஜேந்திரனை கைது செய்து, கல்பனாவை தேடி வருகின்றனர்.

