ADDED : அக் 21, 2024 06:17 AM

திருநெல்வேலி : ''தி.மு.க., கூட்டணி கட்சியினர் அரசு செயல்பாடு குறித்து கேள்வி கேட்க துவங்கி விட்டனர். அக்கட்சிக்கு சரிவு துவங்கி விட்டது,'' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில், அ.தி.மு.க., 53வது ஆண்டு துவக்க விழா நடந்தது. மாவட்ட செயலர் இசக்கி சுப்பையா தலைமை வகித்தார். கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க.,வை துவக்கிய போது எம்.ஜி.ஆர். எத்தனை சோதனைகளை சந்தித்தாரோ, அதேபோல சோதனைகளை ஜெயலலிதாவும் சந்தித்தார். தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக ஜெயலலிதா இருந்தபோது அவருக்கு பாதுகாப்பு இல்லை. அவர் மீது புத்தகத்தை வீசி எறிந்தனர்.
தலைமுடியை பிடித்து இழுத்தனர். எம்.ஜி.ஆர்., காலத்திலும், ஜெயலலிதா காலத்திலும், தற்போதும் நாம் போராட்டங்களை எதிர்கொண்டு வருகிறோம்.
சட்டசபையில் என் மேஜை மீதும், கடம்பூர் ராஜு மேஜை மீதும் ஏறி தி.மு.க., -- எம்.எல்.ஏ.,க்கள் டான்ஸ் ஆடுகின்றனர். ஸ்டாலின் குடும்பத்திற்குள் சிக்கி தி.மு.க., சின்னா பின்னமாகி வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க., ஆட்சியை கலைக்க தி.மு.க.,வுடன் இணைந்து சிலர் ஓட்டளித்தனர்.
அவர்கள் யார் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். அ.தி.மு.க., இப்போதும் ஒன்றாகத்தான் உள்ளது. பிளவு ஏதும் இல்லை. கருணாநிதியாலேயே அ.தி.மு.க.,வை எதுவும் செய்ய முடியவில்லை.
தி.மு.க., குடும்பத்தில் இருந்து உதயநிதி துணை முதல்வர் ஆகியுள்ளார். அ.தி.மு.க.,வில் சாதாரண தொண்டனும் பதவிக்கு வர முடியும். அதற்கு நானே சான்று.
மதுரையில் நடந்த அ.தி.மு.க., பொன்விழா மாநாட்டிற்கு, 15 லட்சம் பேர் வந்தனர். ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை.
ஆனால், தி.மு.க.,வினர் நடத்தும் கூட்டம் முடிந்து போகும்போது, ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தராமல் உரிமையாளரின் மூக்கை உடைக்கின்றனர்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., 19.30 சதவீதம் ஓட்டு மட்டுமே பெற்றது. 2024 தேர்தலில் பெரிய கூட்டணி எதுவும் இல்லாமல், 2.50 சதவீதம் ஓட்டு கூடுதலாக கிடைத்தது. தி.மு.க., 2019ல், 33.92 சதவீதம் ஓட்டு பெற்றது. 2024ல், 26.52 சதவீதம் ஓட்டு மட்டுமே பெற்றுள்ளது. 7 சதவீத ஓட்டு குறைந்துள்ளது.
இதுவரை தி.மு.க.,வின் குறைகளை சுட்டிக் காட்டாத கூட்டணி கட்சியினர், தற்போது அரசின் செயல்பாடுகளை, குறைகளை சுட்டிக் காட்ட துவங்கி விட்டனர். தி.மு.க.,வுக்கு சரிவு ஏற்பட துவங்கிவிட்டது.
தி.மு.க., ஆட்சிக்கு வந்து 40 மாதங்களில் எந்த பெரிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. 3 லட்சம் கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.