இபிஎஸ் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்சேர்ப்பதை தமிழகமே சொல்கிறது: பிரேமலதா
இபிஎஸ் கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள்சேர்ப்பதை தமிழகமே சொல்கிறது: பிரேமலதா
ADDED : ஆக 31, 2025 07:03 PM

சென்னை: இபிஎஸ் தேர்தல் பிரசாரக்கூட்டத்துக்கு பணம் கொடுத்து ஆள் சேர்ப்பதாக தமிழகமே சொல்கிறது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை திநகரில் தேமுதிக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பின்னர் பேட்டியளித்த பிரேமலதா நிருபர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
மூப்பனாரின் 24ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் எல்.கே. சுதிஷ் கலந்து கொண்டதில் எவ்வித அரசியலும் இல்லை. இது நட்பின் அடிப்படையிலானது. 40 ஆண்டு கால நட்பின் காரணமாக அந்த நினைவஞ்சலியில் கலந்து கொண்டோம். இதற்கும் கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் வெற்றி அடையட்டும், வாழ்த்துகள். அதிகமான முதலீடுகளை ஈர்க்கவே சென்றுள்ளதாக சொல்லி இருக்கிறார். அவரின் பயணம் 100 சதவீதம் தமிழகத்துக்காகவும், தமிழக மக்களுக்காகவும் என்பது தான் தேமுதிகவின் ஒரே கோரிக்கை.
ஏற்கனவே அவர் பலமுறை வெளிநாடு சென்றிருக்கிறார். அதன் மூலம் எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது? எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளது என்பது மில்லியன் டாலர் கேள்வி. எனவே தான் அனைத்து எதிர்க்கட்சிகளும் வெள்ளை அறிக்கை வேண்டும் என்று கேட்கின்றனர்.
ஒரு நாளைக்கு 3 தொகுதிகளுக்கு ஈபிஎஸ் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் செல்கிறார். அந்த வகையில் அவரின் பயணம் உள்ளது. எங்களின் தேர்தல் பிரசார பயணம் வித்தியாசமானது. இபிஎஸ் கூட்டத்துக்கு பணம் கொடுத்து தான் ஆட்கள் கூட்டப்படுகின்றனர் என்பதை நான் சொல்வதா? தமிழகமே அதைத்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறது.
அவர்கள் (அதிமுக) மட்டும் என்று இல்லை. எந்த கட்சிக்கு என்றாலும் எப்படி கூட்டம் கூடுகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்த ஒரு உண்மை. இல்லை என்று யாரும் மறுக்கமுடியாது. இபிஎஸ் மட்டும் காசு கொடுத்து கூட்டம் கூட்டுகிறாரா என்பதல்ல, இன்றைக்கு எல்லா கட்சிகளும் அப்படித்தான் இருக்கிறது. இதில் விதிவிலக்கு தேமுதிக.
இவ்வாறு பிரேமலதா பேட்டியின் போது கூறினார்.

