மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி உதவி! தொண்டர்களுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடி உதவி! தொண்டர்களுக்கு இ.பி.எஸ். அட்வைஸ்
ADDED : நவ 30, 2024 02:18 PM

சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க.,வினரை அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை;
பெஞ்சல் புயல் இன்று கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் , வட தமிழ்நாடு மற்றும் கடலோர மாவட்டங்களில் வேகமான காற்றுடன் மழை பெய்து வருகிறது. எனவே பொதுமக்கள் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள எச்சரிக்கைகளை கவனமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்வதுடன், மிக அத்தியாவசிய தேவைகள் ஏற்பட்டால் ஒழிய மற்ற நேரத்தில் வெளியே வரவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் பொதுமக்கள் சாலைகளில் நடக்கும்போது கழிவு நீர் குழாய் திறப்புகள் மூடியுள்ளனவா என்றும், மின்கம்பிகள் எதுவும் அறுந்து விழுந்துள்ளதா என்பதையும் கவனத்தில் கொண்டு நடந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதேசமயம் அரசு உடனடியாக ஆங்காங்கே தேங்கி நிற்கும் வெள்ள நீரை அகற்ற வேண்டும் என்றும், அம்மா உணவகங்கள் 24 மணிநேரமும் செயல்பட்டு, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அவர்கள் வசிக்கும் இடத்திற்கே சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஆங்காங்கே மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை நேரடியாக அவர்களிடத்தில் சென்று செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

