தி.மு.க.,வினருடன் கைகோர்த்த மாஜி அ.தி.மு.க., கவுன்சிலர்
தி.மு.க.,வினருடன் கைகோர்த்த மாஜி அ.தி.மு.க., கவுன்சிலர்
ADDED : ஜூலை 24, 2011 12:07 AM
சேலம் : சேலம், அங்கம்மாள் காலனி விவகாரத்தில், முன்னாள் அ.தி.மு.க., கவுன்சிலர் சித்தானந்தம், தி.மு.க.,வினருடன் கைகோர்த்த போதே, சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க.,வில் பூகம்பம் கிளம்பியது.
ஆனால், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சித்தானந்தத்துக்கு ஆதரவாக செயல்பட்டதால், பிரச்னை பெரிதாக்கப்படவில்லை. தற்போது சித்தானந்தம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஆதரவாக செயல்பட்டோர் கலக்கம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில், சேலம் அங்கம்மாள் காலனி நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தி.மு.க.,வைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி, காங்., பிரமுகர்கள் எம்.ஐ.டி., கிருஷ்ணசாமி, உலக நம்பி, ஜிம் ராமு, மகேந்திரன், சித்தானந்தம், கனகராஜ், ஆட்டோ முருகன், கறிக்கடை பெருமாள், போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணன், முன்னாள் ஆர்.டி.ஓ., பாலகுருமூர்த்தி ஆகிய 13 பேர் மீது, ஏழு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சித்தானந்தம் என்பவர், அ.தி.மு.க.,வில் சூரமங்கலம் பகுதி ஜெ., பேரவை செயலராக பொறுப்பு வகித்து வந்தார். 2001-06ல், மாநகராட்சி, 24வது வார்டு கவுன்சிலராக பொறுப்பு வகித்தார். அங்கம்மாள் காலனி, 24 வது வார்டுக்குட்பட்ட பகுதியாகும். 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பில் இருந்ததால், சித்தானந்தம், 'அடக்கி வாசித்து' வந்தார்.
கடந்த, 2006ல் தி.மு.க., ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. சேலம் மாநகராட்சி, தி.மு.க., வசம் ஆனது. மாநகராட்சி, 24வது வார்டில், பா.ம.க.,வைச் சேர்ந்த பெரியண்ணன், கவுன்சிலராக வெற்றி பெற்றார். தி.மு.க., ஆட்சியின் போது, சேலம் மாநகராட்சியில், ஒரு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மூலம், புறம்போக்கு நிலம், புறம்போக்கு ஆக்கிரமிப்பு நிலம் ஆகியவற்றை வளைத்துப் போடும் பணியில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் களம் இறங்கினர்.
பல கோடி ரூபாய் மதிப்புள்ள அங்கம்மாள் காலனி, 24வது வார்டில் இருப்பது, சித்தானந்தத்துக்கு நன்கு தெரியும். அந்த நிலத்தின் மூலம், 'பணம் பண்ண' விரும்பினார். அங்கம்மாள் காலனி விவகாரத்தில், தி.மு.க., வினருக்கு ஆதரவாகவும் களம் இறங்கி வேலை பார்க்கத் துவங்கினார். அ.தி.மு.க.,வில் இருந்து கொண்டு, தி.மு.க.,வினருடன் சித்தானந்தம் கைகோர்த்தது, கட்சி நிர்வாகிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
அங்கம்மாள் காலனி விவகாரம் தொடர்பாக, கடந்த ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில், சித்தானந்தம் பெயரும் சேர்க்கப்பட்டது. அது, அ.தி.மு.க.,வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., பிரதிநிதி முத்துசாமி,'சித்தானந்தத்தின் மீது கட்சி சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மாநகர், மாவட்ட அ.தி.மு.க., செயலர் செல்வராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
கட்சி அலுவலகத்துக்கு முன் மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றார். அ.தி.மு.க.,வினர் முத்துசாமியை சமாதானம் செய்தனர். பிறகு, சேலம் தேர்தல் பொறுப்பாளர்களாக இருந்த முன்னாள் அமைச்சர்கள் முத்துசாமி, கண்ணப்பன் ஆகியோரின் கவனத்துக்கு, சித்தானந்தத்தின் பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
ஆனால் அவர்கள், சித்தானந்தம் குறித்து, கட்சி தலைமைக்கு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. தேர்தல் பொறுப்பாளர்களைத் தவிர, சேலம் மாநகர், மாவட்ட அ.தி.மு.க., செயலர் செல்வராஜ் உள்ளிட்ட ஒரு சிலரும், சித்தானந்தத்துக்கு ஆதரவுக் கரம் நீட்டி, பலன் பெற்றனர். முழு பூசணியை சோற்றுக்குள் மறைப்பது போல, சித்தானந்தத்தின் விவகாரத்தை மறைத்து விட்டனர்.
தற்போது, அங்கம்மாள் காலனி விவகாரத்தில், சித்தானந்தத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். சித்தானந்தம், தி.மு.க.,வினருடன் கைகோர்த்து செயல்பட்ட போதே, கட்சி தலைமை, அவர் மீது நடவடிக்கை எடுத்திருந்தால், தற்போது கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டிருக்காது என்று, அ.தி.மு.க., விசுவாசிகள் ஆதங்கப்படுகின்றனர். சித்தானந்தத்தை, 'கட்டிக் காப்பாற்ற' முயன்ற அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள், தற்போது கலக்கத்தில் உள்ளனர்.