ஆசை, ஆசையாகவே இருக்கும்; தமிழிசைக்கு ஜெயக்குமார் பதில்
ஆசை, ஆசையாகவே இருக்கும்; தமிழிசைக்கு ஜெயக்குமார் பதில்
UPDATED : நவ 24, 2024 05:49 PM
ADDED : நவ 24, 2024 05:46 PM

சென்னை: வரும் 2026ல் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமையும் என்ற தமிழிசையின் ஆசை, ஆசையாக தான் இருக்கும் என்று அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னையில் தமிழக பா.ஜ., தலைவர்களில் ஒருவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல் முதல்வர் ஸ்டாலின் பேசி வருகிறார்.ஆனால் அங்கு விரிசல்கள் ஏற்படக்கூடிய அளவுக்கு தி.மு.க., கூட்டணியில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
ஆட்சியில் பங்கு என்று காங்கிரஸ் கேட்கும் அளவுக்கு அங்கு நிலைமை உள்ளது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தி.மு.க., நினைப்பது போல் சுலபமான தேர்தலாக இருக்காது. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும். அந்த கூட்டணி ஆட்சியில் பா.ஜ., பங்கு பெறும் என்று கூறினார்.
அவரின் கூற்றுபடி, தமிழகத்தில் 2026ல் பா.ஜ., தலைமையில் கூட்டணி ஆட்சி என்று கட்சியினர் பேசி வருகின்றனர். இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் பேசினார். அவரிடம் தமிழிசையின் பேட்டி குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு;
அது அவர் கருத்து, அவர்கள் சொல்வார்கள். எல்லாருக்கும் தான் ஆசை இருக்கும். கேள்வி கேட்கும் உங்களுக்கும் கூட ஒருநாள் முதல்வராக வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆசைக்கு நான் என்ன தடை போடுவது.
ஆசை, ஆசையாகவே தான் இருக்கும். கனவு, கனவாக தான் இருக்கும். அது ஒரு போதும் நிறைவேற போவது கிடையாது. கடந்த மூன்றரை ஆண்டுகால ஆட்சிக்கு எதிராக, மக்கள் பிரச்னைகள் என போராடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.