கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள்; நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அறிவுரை
கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள்; நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் அறிவுரை
ADDED : டிச 15, 2024 04:00 PM

சென்னை: கடன் வாங்கி தேர்தல் களத்தை சந்தியுங்கள் என்று அ.தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் மூத்த நிர்வாகியும், மாஜி அமைச்சருமான கே.பி. முனுசாமி கூறி உள்ளார்.
சென்னையில் நடந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் முனுசாமி பேசியதாவது:மக்கள் வாக்களித்து பலமுறை நாம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம். பல்வேறு சூழலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும், 2014ல் கூட்டணியே இல்லாமல் தேர்தலில் நின்றிருக்கிறோம்.
வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என்றால் நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். எப்படி போராட்டம் நடத்துவோம் என்று சொல்லும் அதே நேரத்தில் திண்ணை பிரசாரம் மிக மிக முக்கியம்.
ஒவ்வொரு பூத்திலும் ஒரு கிளையை ஏற்படுத்த வேண்டும் என்று பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., சொல்லி இருக்கிறார். அந்த கிளையுடன் இணைந்து அப்பகுதியில் இருக்கும் மகளிரணி நிர்வாகிகள் ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளுக்குச் சென்று வாக்காளர்களை சந்திக்க வேண்டும்.
இன்னும் ஐந்தாறு மாதங்களுக்குள்ளாகவே கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சித் தலைவர்கள் பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ள ஆரம்பிப்பார்கள். கடுமையாக உழைப்போம், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்போம்.
நமக்கு இருப்பதோ 16 மாத காலம். இந்த காலத்தில் நாம் களத்தில் தான் இருக்க வேண்டும். பொருளாதாரம் இல்லை என்றால் கடன் வாங்குங்கள். கடன் வாங்குவது தப்பே இல்லை. எதுக்காக வாங்குறீங்க, நமது இயக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும்.
நமது கட்சி தொண்டன் மகிழ்ச்சியாக இருக்க கடன் வாங்கியாவது வெற்றியை பெற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.