அ.தி.மு.க., யாருக்கும் அடிமையில்லை: மதுரையில் இ.பி.எஸ்., ஆவேச பேச்சு மதுரையில் பழனிசாமி பேச்சு
அ.தி.மு.க., யாருக்கும் அடிமையில்லை: மதுரையில் இ.பி.எஸ்., ஆவேச பேச்சு மதுரையில் பழனிசாமி பேச்சு
ADDED : ஜன 08, 2024 05:51 AM

மதுரை: 'அ.தி.மு.க., யாருக்கும் அடிமையும் இல்லை. யாரையும் அடிமைப்படுத்தவும் இல்லை'' என, மதுரையில் நடந்த எஸ்.டி.பி.ஐ., மாநாட்டில் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.
அவர் பேசியதாவது: முதல்வர் ஆவேன் என கனவிலும் நினைக்கவில்லை. தவழ்ந்து, உயர் பதவிக்கு வந்ததாக என்னைக் கொச்சைப்படுத்தி பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின். அரசியலில் உழைத்து தான் மேம்பட்ட பதிவியை அடைந்தேன்.
சண்டையில்லை
ஆனால், ஸ்டாலின் நிலை வேறு. அவருடைய தந்தை முதல்வராக இருந்தார். அதனால், அவரும் முதல்வராகி இருக்கிறார். அதனால், உழைப்பைப் பற்றி அவருக்குத் தெரியாது.
சிறுபான்மையினரை அரண் போன்று காப்பது அ.தி.மு.க., தான். ஆட்சியில் இருந்தபோது, முஸ்லிம்களுக்காக நிறைய திட்டங்களைத் தீட்டி இருக்கிறோம். அ.தி.மு.க., தமிழகத்தை முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தபோதிலும், ஜாதி, மதச் சண்டையில்லை.
வெள்ளை அறிக்கை
முதல்வர் ஸ்டாலின், உலக முதலீட்டாளர் மாநாட்டில் 3,000 பேர் பங்கேற்பர் எனக் கூறியுள்ளார். இதே மாதிரி ஏற்கனவே நடத்தப்பட்ட மாநாட்டில் போட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்னவாயிற்று என்பது குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடவேண்டும்.
கூட்டணி வேறு, கொள்கை வேறு என்பதில் உறுதியாக இருக்கிறோம். பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த பின்னும், மறைமுக கூட்டணி வைத்திருப்பதாக பேசுகிறார் ஸ்டாலின். அப்துல் கலாம் ஜனாதிபதி ஆவதற்கு, அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்களும் ஓட்டளித்துள்ளனர்.
தி.மு.க.,வின் இரண்டரை வருட ஆட்சி காலத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி அதிகரித்துள்ளது. விலைவாசி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. சிறுபான்மையின மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., ஆட்சி எப்போது தொலையும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தி.மு.க., அரசின் குறைபாடுகளை, அக்கட்சியோடு கூட்டணி வைத்துள்ளவர்களால் பேச முடியவில்லை; அடிமைகளாக உள்ளனர். ஆனால், அ.தி.மு.க., யாருக்கும் அடிமை இல்லை; யாரையும் அடிமைப்படுத்தவும் இல்லை. இவ்வாறு பழனிசாமி பேசினார்.