அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு; இ.பி.எஸ்., அறிவிப்பு
அ.தி.மு.க., மாஜி அமைச்சர் தளவாய் சுந்தரம் பதவி பறிப்பு; இ.பி.எஸ்., அறிவிப்பு
UPDATED : அக் 08, 2024 02:00 PM
ADDED : அக் 08, 2024 01:50 PM

சென்னை: அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து முன்னாள் அமைச்சரும், தற்போதைய கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தளவாய் சுந்தரம் நீக்கப்பட்டார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ., தளவாய் சுந்தரம், இவர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தவர். இரு நாட்களுக்கு முன் கன்னியாகுமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., பேரணியை தொடங்கி வைத்தார். அவர், பா.ஜ.,வினருடன் தொடர்பில் இருப்பதாக தகவல் வெளியானதை தொடர்ந்து, அவரது கட்சிப் பதவிகளை பறித்து இ.பி.எஸ்., நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து, அ.தி.மு.க.,பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கட்சி விதிகளுக்கு மாறுபட்டு நடந்து கொண்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவர் அ.தி.மு.க., அமைப்புச் செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுக்கப்படுகிறார்' என்று தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த தளவாய் சுந்தரம், 2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் சட்டப்பேரவைக்கு தேர்வு செய்யப்பட்டவர். இவர், அ.தி.மு.க., சார்பில் ராஜ்யசபா எம்.பி., ஆகவும் பதவி வகித்துள்ளார்.