அ.தி.மு.க., பஞ்., தலைவரை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ.,
அ.தி.மு.க., பஞ்., தலைவரை அடிக்க பாய்ந்த எம்.எல்.ஏ.,
ADDED : மார் 12, 2024 02:18 AM
பெரிய வடகரை: பெரம்பலுார் மாவட்டம், பெரிய வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டு பகுதியில், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ், 20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கு, ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கான, பூமி பூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், பெரம்பலுார் தி.மு.க., எம்.எல்.ஏ., பிரபாகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
இவ்விழாவுக்கு பெரிய வடகரை ஊராட்சி துணை தலைவரான அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முருகானந்தம், 47, என்பவருக்கு அழைப்பு இல்லை. விழா நடப்பது குறித்து தகவலறிந்த முருகானந்தம், விழா நடக்கும் இடத்துக்கு சென்று, விழா ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தவர்களிடம்,'இந்த வார்டின் கவுன்சிலரும், பஞ்சாயத்து துணை தலைவருமான எனக்கு ஏன் அழைப்பு கொடுக்கவில்லை' என கேட்டார்.
அப்போது, அங்கு வந்த தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரபாகரன், 'நீங்கள் எந்த கட்சி' என கேட்டார். அதற்கு, 'நான் எந்த கட்சியாக இருந்தால் என்ன... இந்த பஞ்சாயத்து துணை தலைவர்' என கூறினார். இதனால், ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ., பிரபாகரன், 'உனக்கென்ன இங்க வேலை' என கூறி, முருகானந்தத்தை அடிக்க பாய்ந்து, தள்ளிவிட்டார். இதனால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

