ADDED : அக் 18, 2024 03:16 AM
சென்னை:கலசப்பாக்கம் தொகுதியில் அடங்கிய வனப்பகுதியில், புதிதாக போடப்பட்ட சாலைகளை சேதப்படுத்திய வனத்துறையை கண்டித்து, அக்., 21ல் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளது.
அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கலசபாக்கம் தொகுதி, ஜவ்வாது மலையில் குட்டக்கரை ஊராட்சியில், கீழ்பாதிரி முதல் பெரியவல்லி வரை, ஒரு கோடியே, 33 லட்சத்தில் சாலைகள் பணிக்கு ஒப்பந்தம் கோரப்பட்டது.
கலெக்டரால் உத்தரவு வழங்கப்பட்டு, 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. வனத்துறை அக்., 16ம் தேதி அனுமதி பெறாமல் சாலை அமைப்பதாக கூறி பணியை தடுத்து நிறுத்தி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் வனத்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்கு வனத்துறையினர், 'கலெக்டர் எங்களிடம் உரிய அனுமதி பெறாமல் சாலை பணிகளை மேற்கொண்டதால் நாங்கள் இடித்து விட்டோம்' என, அதிகார தோரணையில் கூறியுள்ளனர்.
மக்கள் வரிப்பணத்தை வீணடித்த வனத்துறையை கண்டித்தும், முன் அனுமதி பெறாமல் சாலை பணியை துவக்கிய மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும், அக்., 21ம் தேதி, அ.தி.மு.க., சார்பில், ஜமுனாமரத்துார் பஸ் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.