ADDED : மார் 04, 2024 03:02 AM

சென்னை: கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் வெற்றி பெற்றவர் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன். 2019 லோக்சபா தேர்தலில், அதே தொகுதியில் தோல்வியை தழுவினார். வரும் லோக்சபா தேர்தலிலும், அதேதொகுதியில் களமிறங்க திட்டமிட்டுள்ளார்.
அ.தி.மு.க., வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு முன்னரே, ஜெயவர்தன் தென்சென்னை தொகுதியில் பிரசாரத்தை துவக்கி உள்ளார். தென்சென்னை தொகுதியின் தற்போதைய தி.மு.க., - எம்.பி.,யான தமிழச்சி தங்கபாண்டியன், தொகுதிக்கும், மக்களுக்கும் செய்த துரோகங்கள் என்ற தலைப்பில், தினமும் ஒரு வீடியோவை, சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
நேற்று பள்ளிக்கரணை சதுப்பு நிலம் தொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், 'பெருங்குடி குப்பை கிடங்கு உள்ளது. அதை அகற்ற, 2014ல் எம்.பி.,யாக இருந்த போது, பார்லிமென்டிலும் வலியுறுத்தினேன்.
'அதனால், குப்பை கிடங்கை அகற்ற, 1,200 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின் வந்த எம்.பி., அதில் கவனம் செலுத்தவில்லை. சதுப்பு நிலம் மீட்கப்படாததற்கு, தி.மு.க., - எம்.பி.,யின் செயலற்ற தன்மையே காரணம்' என்று குற்றம் சாட்டி உள்ளார்.

