ADDED : ஜன 26, 2024 12:41 AM

''பறிமுதல் செய்த வாகனங்கள், போலீஸ் ஸ்டேஷன்லயே மாயமாயிடறது ஓய்...'' என்றபடியே, நாளிதழை மடித்து வைத்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தை தான் சொல்றேன்... கடந்த 2019ல, விவசாயி ஒருத்தரின் டிராக்டரை மணல் திருடியதா போலீசார் பறிமுதல் செஞ்சா ஓய்...
''விவசாயியும், சட்டப்படி கோர்ட்ல முறையிட்டு, டிராக்டரை விடுவிக்க, 2021 ஏப்ரல்ல உத்தரவு வாங்கினார்... அந்த உத்தரவோட ரெண்டரை வருஷமா, போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையா நடக்கறார் ஓய்...
''ஆனா, டிராக்டரை அவர் கண்ணுலயே காட்ட மாட்டேங்கறா... கேட்டா, 'எஸ்.பி. ஆபீஸ் கிரவுண்ட்ல நிக்கறதான்னு போய் பாருங்கோ'ன்னு போலீசார் அலட்சியமா சொல்றா ஓய்...
''அங்க போய் தேடி பார்த்தும், அவரது டிராக்டர் கிடைக்கல... 'எனக்கு விவசாய பணிக்கு டிராக்டர் தேவை'ன்னு கோர்ட் உத்தரவோட, எஸ்.பி. ஆபீஸ்ல புகார் தந்துட்டு, புலம்பிண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பத்திரிகையாளர்கள் அங்கீகார அட்டைகளை இஷ்டத்துக்கு வாரி குடுத்திருக்காங்க வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகைகளின் செய்தியாளர்களுக்கு மட்டுமே, அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள்ல அடையாள அட்டைகள் தருவா...
''ஆனா, சிவகங்கையில, தி.மு.க. நகராட்சி தலைவரின் எடுபிடிகள், வெளியே வராத நாளிதழ்களின் செய்தியாளர்கள்னு பலருக்கும் அடையாள அட்டைகளை வாரி குடுத்திருக்காங்க வே...
''அதே நேரம், அங்கீகரிக்கப்பட்ட முன்னணி பத்திரிகை செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்காம, மாவட்ட தலைமை பெண் அதிகாரி ஒருதலைபட்சமா நடந்துக்கிறாங்க... இது பத்தி, பல முறை அவங்க கவனத்துக்கு மூத்த பத்திரிகையாளர்கள் சுட்டிக்காட்டியும், அவங்க எதையும் கண்டுக்கல வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆஷா அஜித் மேடம், கார்த்தாலயே ஆபீஸ் கிளம்பிட்டாங்க போலிருக்கே...'' என, தெருவை பார்த்து முணுமுணுத்த குப்பண்ணாவை பார்த்தபடியே, ''பதவியே வேண்டாம்னு தலைதெறிக்க ஓடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பா.ஜ. கூட்டணி இல்லாம, தனியா லோக்சபா தேர்தலை சந்திச்சா, பல கோடி ரூபாய், 'பழுத்துடும்' என்பதால, அ.தி.மு.க. மாவட்ட செயலர்கள் பலரும் பதவியே வேண்டாம்னு புலம்புறாங்க...
''குறிப்பா, கொங்கு மண்டலத்துல, முக்கிய நகரத்துல மாவட்ட செயலரா இருக்கிற எம்.எல்.ஏ. ஒருவர், அந்த பதவியே வேண்டாம்னு சொல்லிட்டாராம்... அவரது பொறுப்பை, இன்னொரு எம்.எல்.ஏ. வுக்கு கைமாத்திவிட ஏற்பாடு நடக்குது பா...
''அந்த எம்.எல்.ஏ. வுக்கு பிரபல லாட்டரி அதிபர் ஆதரவு இருக்குது... அவர் எம்.எல்.ஏ. ஆகவே, லாட்டரி அதிபர் தான் 10 கோடி ரூபாய் கொடுத்தாரு... இப்ப, கட்சி பதவியை கைப்பற்றவும் ஆதரவு தந்திருக்காரு பா...
''இதுக்கு மத்தியில, கொங்கு மண்டலத்துல நாலு லோக்சபா தொகுதிக்கு பொறுப்பு வகிக்கிற, 'மாஜி' அமைச்சர், கோவை, பொள்ளாச்சி தொகுதிக்கு வேட்பாளர்களை தேர்வு பண்ணிட்டாரு...
''கோவையில, தன் பினாமி ஒருத்தரையும், பொள்ளாச்சியில தன், 'அன்பு' அண்ணனையும் நிறுத்த முடிவு பண்ணிட்டாரு... இந்த ரெண்டு தொகுதியிலயும் பணத்தை தண்ணீரா செலவழிக்கவும் திட்டமிட்டிருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.

