அ.தி.மு.க., இனியும் விக்கெட் எடுக்காது திருப்பூரில் அண்ணாமலை சவால்
அ.தி.மு.க., இனியும் விக்கெட் எடுக்காது திருப்பூரில் அண்ணாமலை சவால்
ADDED : பிப் 28, 2024 12:10 AM
திருப்பூர்:''அ.தி.மு.க., தரப்பில் இனியும் விக்கெட் எடுக்க வாய்ப்பில்லை; அக்கட்சியின் பெரும் புள்ளிகள், பா.ஜ.,வில் இணையப்போகின்றனர்,'' என,அண்ணாமலை நேற்று கூறினார்.
திருப்பூரில் நேற்று 'என் மண்; என் மக்கள்' பாத யாத்திரையை நிறைவு செய்த பின், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி:
தமிழகத்தில் நடத்தப்பட்ட பாதயாத்திரையால், பா.ஜ., பெரிய கட்சியாக வளர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இருப்பினும், எங்களுக்கு அதில், சமாதானம் இல்லை. தமிழகத்தில் தனிபெரும் கட்சியாக பா.ஜ., மாறி கொண்டிருப்பது, 2024 லோக்சபா தேர்தலில் தெரியவரும்.
நல்ல முடிவு
பா.ஜ., பாதயாத்திரை மாபெரும் மக்கள் இயக்கமாக மாறி, வெற்றிகரமாக முடிந்துள்ளது. மத்திய பா.ஜ., அரசின், 10 ஆண்டு சாதனைகளை, பட்டி, தொட்டியெங்கும் கொண்டு சேர்த்துள்ளோம்.
பிரதமர் மோடியின் பயனாளிகள், நல்லாட்சியை விரும்புகிறவர்கள், தமிழகத்தின் நடுநிலை வாக்காளர்கள் என எல்லாரும், நல்ல முடிவு எடுத்துஉள்ளனர்.
இத்தேர்தல், மோடிக்கான தேர்தல்; உலக அளவில், இந்தியாவை முதல் நாடாக மாற்ற அடித்தளமிடும் தேர்தலாக அமையும். விரைவில் பா.ஜ.,வில், பெரிய புள்ளிகள்இணைவர்.
சிலர், டில்லி சென்று இணைய விரும்புகின்றனர். மாற்று கட்சியில் இருந்து, பெரிய புள்ளிகள் வரும்போது, எங்கள் கட்சியில் உள்ள நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சமாதானம் செய்ய வேண்டியுள்ளது.
எம்.எல்.ஏ.,க்கள் - முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் பலரும் கட்சியில் இணைய உள்ளனர். மேலும், இரண்டரை ஆண்டு பொறுப்பில் இருந்தும், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விஜயதரணி, பா.ஜ.,வில் இணைந்துஉள்ளார்.
இன்றைய பா.ஜ., வளர்ச்சியை உணர்ந்து, வரும் தேர்தலில் நிற்கும் வல்லமையுடன், மாற்றுக்கட்சினர், பா.ஜ., பக்கம் வருகின்றனர். அதற்கான இடத்தை உருவாக்க வேண்டும்.
வருபவர்களை, ஆத்மார்த்தமாகவும், அன்புடனும் ஏற்றுக்கொள்வோம். மற்ற மாநிலங்களை போல், திரும்பி செல்ல விடமாட்டோம். இது ஆரம்பம் தான்; தொடர்ந்து பார்க்கலாம்.
அதிரடிகள் நடக்கும்
இரண்டு பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,விலிருந்து அ.தி.மு.க.,வுக்கு வரப்போவதாக, கோவை எம்.எல்.ஏ., அம்மன் அர்ஜுனன் தெரிவித்துள்ளார்; அவர்கள் பெயரை முதலில் கூறட்டும்.
முதலில் எங்களை மதிக்காத ஒரு கட்சியினர், காலை துவங்கி இரவு வரை, நாள் முழுதும் எங்களையே திட்டிக்கொண்டிருக்கின்றனர். அரசியல் எதிரிகளை வெல்ல, நாங்களும், சாம, தான, பேத, தண்டத்தைபிரயோகிப்போம்.
அ.தி.மு.க., இனியும் விக்கெட் எடுக்க வாய்ப்பில்லை; எங்களுடன் கூட்டணியில் இணையவும் வாய்ப்பில்லை. நாங்களும், யாரையும் எதிர்பார்ப்பதில்லை; வருபவர்கள் தானாக வருகின்றனர். அ.தி.மு.க.,வின் பெரும் புள்ளிகள், விரைவில் பா.ஜ.,வில் இணையப் போகின்றனர். அதன்பின் பல அதிரடிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

