எம்.ஜி.ஆருக்கு பதிலாக அரவிந்த்சாமி படத்துடன் அ.தி.மு.க.,வினர் வாழ்த்து
எம்.ஜி.ஆருக்கு பதிலாக அரவிந்த்சாமி படத்துடன் அ.தி.மு.க.,வினர் வாழ்த்து
ADDED : ஜன 18, 2024 01:00 AM

திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனுார், அ.தி.மு.க., மேற்கு ஒன்றியம் சார்பில், பல இடங்களில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
இதில், மாதனுார் அடுத்த கீழ்மிட்டாளம், அ.தி.மு.க., கிளை கழகம் சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனரில், எம்.ஜி.ஆர்., படத்திற்கு பதிலாக ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான, தலைவி என்ற சினிமா படத்தில், எம்.ஜி.ஆர்., கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரவிந்த்சாமியின் படத்தை வைத்திருந்தனர்.
இந்த படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவை கொண்டாட, அ.தி.மு.க.,வினர் நேற்று காலை வந்தனர்.
அப்போது, எம்.ஜி.ஆர்., படத்திற்கு பதிலாக நடிகர் அரவிந்த்சாமி படம் இருப்பதை கண்டு, நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சுதாரித்த அ.தி.மு.க, வினர், நடிகர் அரவிந்த்சாமி படத்தின் மீது, அவசர அவசரமாக எம்.ஜி.ஆர்., படத்தை ஒட்டி, அவரது பிறந்த நாளை கொண்டாடினர்.
இதை பார்த்தவர்கள், 'அ.தி.மு.க.,வில் இப்போது, இருப்பவர்களுக்கு, எம்.ஜி.ஆர்., எப்படி இருப்பார் என்பது கூட தெரியாமல்தான், இப்படி அரவிந்த்சாமி படத்தைப் போட்டு போஸ்டர் அடித்தார்களா?' என கேள்வி எழுப்பினர்.