ஆவின் பாலகம் துவங்குவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் முன்பணம், வாடகையும் ரத்து
ஆவின் பாலகம் துவங்குவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு மானியம் முன்பணம், வாடகையும் ரத்து
ADDED : அக் 15, 2024 07:21 AM

சிவகங்கை : தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கும் பொருட்டு அரசு அலுவலக இடங்களில்வாடகை, டெபாசிட் இன்றி ஆவின் பாலகம் வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் உதவித்தொகையுடன் தொழில் செய்து முன்னேறவும், தொழில் முனைவோராக வளரவும் அரசு உதவிட வேண்டும் என அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் மூலம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன் எதிரொலியாக கலெக்டர், தாசில்தார் மற்றும் பிற அரசு துறை வளாகங்களில் ஆவின் பாலகம் அமைத்து கொள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக டெபாசிட் தொகை, முன்பணம் ஏதும் மாற்றுத்திறனாளிகள் செலுத்த தேவையில்லை. ஒரு ஆவின் பாலகம் வைக்க ரூ.1.5 லட்சம் செலவாகும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் ஆவின் நிர்வாகம் அனுமதி கடிதத்துடன் பாலகத்திற்கான பெட்டி, ஆவின் பொருட்களை ரூ.50 ஆயிரத்திற்கு மானியமும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ரூ.50 ஆயிரம் மானியமும் தரப்படும். மீதமுள்ள ரூ.50 ஆயிரம் மட்டுமே மாற்றுத்திறனாளி சொந்த நிதி செலவிட வேண்டும். இதன் மூலம் தொழில் முனைவோராகலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

