ADDED : அக் 14, 2025 07:53 AM

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற மகா கவிபாரதியாரின் பொன்மொழிகளுக்கு ஏற்ப சட்டக்கல்லுாரியில் படித்துக்கொண்டே மாணவி ஏ.ஜெ.சிவசக்தி, உடலை வில்லாக வளைத்து யோகா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், மல்லர்கம்பம் போன்ற விளையாட்டுகளில் மாநில, தேசிய அளவில் சாதனைகள் புரிந்துள்ளார்.
இவரது சாதனைகளை பாராட்டி தமிழக அரசு 'கலைஇளமணி விருது' வழங்கியுள்ளது. தான் கற்ற கலையை பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக கற்பித்து வருகிறார் சிவசக்தி.
இனி அவர்...
விழுப்புரம் மாவட்டம் சிந்தாமணி எனது சொந்த ஊர். தற்போது விழுப்புரம் சட்டக் கல்லுாரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன். எனது 12 வயது முதல் மல்லர் கம்பம், சிலம்பத்தில் பயிற்சிபெற்று வருகிறேன். தமிழரின் பாரம்பரிய விளையாட்டானமல்லர் கம்பத்தில் தேசிய அளவில் மூன்றாம் இடம் வென்றுள்ளேன்.
இது போக யோகா, ஜிம்னாஸ்டிக், சிலம்பம் போன்ற பல்வேறு விளையாட்டில் மாநில மற்றும் தேசிய அளவில் வென்றுள்ளேன். சில ஆண்டுகளுக்கு முன்பு விளையாட்டில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.
அப்போது முதல் பள்ளியில் பயிலும், விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு விழுப்புரத்தில் சிவசக்தி மல்லர் கம்ப கலைக்கூடம் என்ற பெயரில் இலவசமாக தினமும் காலை 6:00 முதல் 8:00 மணி வரை வகுப்பு எடுக்கிறேன். இந்த பயிற்சி வகுப்பில் 120க்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதற்கு தேவைப்படும் உபகரணங்களை என்னால் முடிந்த வரை ஏற்பாடு செய்து நடத்திவருகிறேன். தொடர்ந்து நானும் விளையாடி வருகிறேன். அண்மையில் சென்னையில் நடந்த மாநில மல்லர் கம்பம் போட்டியில் எனது மாணவர்கள் வெற்றிபெற்றனர்.
வெளிப்புற விளையாட்டுகள் ஒன்றே உடல் ஆரோக்கியம், எண்ணம், சிந்தனை, ஒழுக்கம் மற்றும் வாழ்வில் நல்ல பாதையை அமைத்து தரும் என முழுமையாக நம்புகிறேன். எனவே நான் மட்டுமின்றி, எனது மாணவர்களை விளையாட்டுத்துறையில் தேசிய அளவில் சாதிக்க வைத்து அவர்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதே எனது லட்சியம்.
இவரை வாழ்த்த... 90253 05215.