11,127 ரயில் ஓட்டுநர் பணி நிரப்ப அறிவிப்பு வெளியீடு
11,127 ரயில் ஓட்டுநர் பணி நிரப்ப அறிவிப்பு வெளியீடு
ADDED : மே 17, 2026 12:16 AM

சென்னை: ரயில்வேயில், நாடு முழுதும், 'உதவி லோகோ பைலட்' எனப்படும் ரயில் ஓட்டுநர் பணிக்கு, 11,127 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ரயில்வேயில், பல்வேறு பிரிவில் இரண்டு லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. குறிப்பாக, மெக்கானிக்கல், பாயிண்ட் மேன், டிராக் மேன் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக, போதிய ஆட்கள் நியமனம் செய்யப்படவில்லை.
இதனால், ரயில்வே பணியாளர்களுக்கு கூடுதல் பளு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுதும் ரயில்வேயில், 11,127 ரயில் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே பயனாளர் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜாபர் அலி கூறியதாவது:
இந்திய ரயில்வேயில், 11,127 ரயில் ஓட்டுநர் பணியிடங்கள், நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், ஜூன் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, கணினி வழி ஆப்டிடியூட் டெஸ்ட் ஆகியவற்றின் வாயிலாக, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விருப்பம் உள்ளோர், www.rrbapply.gov.in அல்லது www.rrbchennai.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தமிழிலும் தேர்வு எழுத முடியும் என்பதால், தமிழக இளைஞர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்து, ரயில்வேயில் பணிக்கு சேர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
