உண்மை தன்மையை அறிந்து செயல்பட மின் குறைதீர் மன்றத்திற்கு அறிவுரை
உண்மை தன்மையை அறிந்து செயல்பட மின் குறைதீர் மன்றத்திற்கு அறிவுரை
ADDED : ஆக 21, 2024 02:15 AM
சென்னை:'மின் நுகர்வோர் குறைதீர் மன்றம், தன்னுடைய தீர்வை முடிவு செய்யும் முன், ஆவணங்களில் உள்ள உண்மை தன்மையை அறிய வேண்டும்' என, தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணைய குறை தீர்ப்பாளர் உத்தர விட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் டி.என்.கே.புரத்தை சேர்ந்த ராஜா என்பவர், மதுரையில் உள்ள தன் வீட்டிற்கு மும்முனை மின் இணைப்பு கோரி விண்ணப்பித்தார்.
உரிய காலத்திற்குள் இணைப்பு தராததால், மதுரை குறைதீர் மன்றத்தில் மனு அளித்துள்ளார். அங்கும் தீர்வு கிடைக்காதபட்சத்தில், ஆணையத்தில் உள்ள மின் குறை தீர்ப்பாளரிடம் மேல்முறையீடு செய்துள்ளார். இதை விசாரித்து, குறை தீர்ப்பாளர் பிறப்பித்த உத்தரவு:
கள ஆய்வு செய்த மின் வாரிய பொறியாளர்கள், மும்முனை மின்சாரம் வழங்க, 'கேபிள்' பதிக்க வேண்டும் என்றும், தற்போது கையிருப்பில் இல்லை என்றும் கூறியுள்ளனர். 15 நாட்களில் மனுதாரர் வாங்கித் தர வேண்டும் என்றும், அதற்குள் தரவில்லை என்றால், விண்ணப்பம் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளனர்.
கேபிள் வாங்கி தரவில்லை என்ற காரணத்திற்காக, விண்ணப்பத்தை ரத்து செய்த செயல் ஏற்புடையதாக இல்லை. விதிக்கு முரண்பாடாக தெரிகிறது. எனவே, விண்ணப்பத்தை ரத்து செய்தது சரியான நிலைப்பாடு இல்லை. ரத்தான விண்ணப்பத்தின் பழைய நிலையை மீட்டெடுத்து, மும்முனை மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்படுகிறது.
விண்ணப்பத்தை ரத்து செய்தது சரியான நடவடிக்கையே என்ற, குறைதீர் மன்றத்தின் ஆணை சரியான செயலாக கருதப்படவில்லை. எனவே, வரும் காலங்களில் குறைதீர் மன்றம் தன் தீர்வை முடிவு செய்யும் முன், ஆவணங்களில் உள்ள உண்மை தன்மையை அறிய அறிவுறுத்தப்படுகிறது.
உரிய காலத்தில் மின் இணைப்பு வழங்கி, அதுதொடர்பான அறிக்கையை, 30 நாட்களுக்குள் குறைதீர்ப்பாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.