ADDED : ஜூலை 30, 2025 07:13 AM
சென்னை: 'ரேஷன் கடைகளில், தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய, கிடங்குகளில் உள்ள பொருட்களை, கலெக்டர்களிடம் காட்ட வேண்டும்' என, மாவட்ட வழங்கல் அதிகாரிகளை, உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், உணவு வழங்கல் துறை, நுகர்பொருள் வாணிப கழகம், சேமிப்பு கிடங்கு நிறுவனம் போன்றவற்றின், ஒருங்கிணைந்த ஆய்வு கூட்டம், சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று நடந்தது. இதில், துறை செயலர் சத்யபிரதா சாஹு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
நடப்பு நெல் கொள்முதல் சீசன் முடிவடைய உள்ள நிலையில், கொள்முதல் நிலையங்களில் உள்ள, நெல்லை விரைந்து அரிசி ஆலைகளுக்கு அனுப்புமாறு, அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
மாவட்ட வழங்கல் அதிகாரிகள், வாணிப கழக மண்டல மேலாளர்கள், கிடங்கு தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள், பொது வினியோக திட்ட கூட்டுறவு இணை பதிவாளர்கள், கிடங்குகளில் ஆய்வு செய்து, ரேஷன் பொருட்கள் தரத்தை சோதித்து, அவற்றை கலெக்டரிடம் காட்டி தரமாக இருப்பதை உறுதி செய்த பின், ரேஷன் கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.