ADDED : மே 13, 2026 12:35 AM

சென்னை: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்த கட்சி சார்பில், மாநில தலைமை வழக்கறிஞர் நியமிக்கப்படுவார். அதே போல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்களும் நியமிக்கப்படுவர்.
தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதலில் தமிழக அரசின் அட்வகேட் ஜெனரலாக, மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நியமிக்கப்பட்டார். பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி வந்த அவர், தனிப்பட்ட காரணங்களால், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, புதிய அட்வகேட் ஜெனரலாக, கடந்த 2024ம் ஆண்டில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று ஆண்டுகளாக அட்வகேட் ஜெனரலாக, அவர் பதவி வகித்தார்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தன் பதவியை ராஜினாமா செய்து, தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கடந்த 2009ம் ஆண்டு முதல் 2011 வரையிலான தி.மு.க., ஆட்சி காலத்திலும் அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவர்.
புதிய அட்வகேட் ஜெனரல், இன்னும் ஓரிரு நாட்களில் நியமிக்கப்படுவார் என கூறப்படுகிறது. தற்போது இந்த பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஐந்து மூத்த வழக்கறிஞர்கள், இந்த பதவியை எதிர்பார்த்து உள்ளதாக, உயர் நீதிமன்ற வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.
சமீபத்தில் கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் ரவீந்திரன், முத்துக்குமார் ஆகியோர், தங்கள் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர்.
