தமிழகத்தில் 112 இடங்களில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தி
தமிழகத்தில் 112 இடங்களில் 'ஏடிஸ்' கொசுக்கள் உற்பத்தி
ADDED : அக் 01, 2024 01:07 AM
சென்னை : தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை பரப்பும் 'ஏடிஸ்' கொசுக்கள், 112 இடங்களில் உற்பத்தியாவது, பொது சுகாதார துறை ஆய்வில் தெரியவந்து உள்ளது.
தமிழகத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்தால், 'இன்ப்ளூயன்ஸா, டெங்கு' காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையை, பொது சுகாதார துறை தீவிரப்படுத்தி உள்ளது.
அதன்படி, அனைத்து சுகாதார மாவட்டங்களிலும், 8,351 பகுதிகளில் கொசுக்களும், லார்வாக்களும் சேகரிக்கப்பட்டு, பொது சுகாதார ஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.
அதில், 112 இடங்களில் டெங்கு காய்ச்சலை பரப்பும், 'ஏடிஸ்' கொசுக்கள் அதிகம் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஒவ்வொரு சுகாதார மாவட்டத்திலிருந்து, 15 நாட்களுக்கு ஒரு முறை, அப்பகுதிகளில் உள்ள கொசுக்களால் ஏற்படும் வைரஸ் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.
பகுப்பாய்வில் டெங்கு பாதிப்புக்கான வைரஸ் இருந்தால், அது தனியே பிரிக்கப்பட்டு, டெங்கு காய்ச்சலில் உள்ள நான்கு வகைகளில், எந்த வகை என்பது கண்டறியப்படுகிறது. இந்த ஆய்வால், நோய் பரவலாகும் முன், தடுப்பு நடவடிக்கையை முன்னெடுக்க முடியும்.
கடந்தாண்டில், 14,212 இடங்களில் கொசு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 579 பகுதிகளில், டெங்கு கொசுக்கள் இருந்தது கண்டறியப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.