ஒகேனக்கல்லில் 2 மாதத்திற்கு பின் மீண்டும் பரிசல் பயணம் துவக்கம்
ஒகேனக்கல்லில் 2 மாதத்திற்கு பின் மீண்டும் பரிசல் பயணம் துவக்கம்
ADDED : மே 09, 2024 11:16 PM

ஒகேனக்கல் : ஒகேனக்கல் ஐந்தருவிக்கு செல்லும் வழியிலுள்ள படித்துறையில் கடந்த, 2 மாதமாக நடந்து வந்த பராமரிப்பு பணி முடிவடைந்த நிலையில், நேற்று மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது.
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு, தமிழகம் மட்டுமன்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழையின்றி வறட்சியால், தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த, 2 மாதமாக வினாடிக்கு, 200 கன அடியாக நீர்வரத்து சரிந்துள்ளது. இதனால், அங்குள்ள ஐவர் பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகள் முற்றிலுமாக வறண்டு காணப்படுகிறது.
இதனால், ஒகேனக்கல் காவிரியாறு ஆங்காங்கே குட்டைப்போல் காட்சி அளித்த நிலையில். ஐந்தருவிக்கு செல்லும் வழியிலுள்ள படித்துறை மேம்பாட்டு பணிக்காக பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய மேம்பாட்டு நிதியிலிருந்து, 36.83 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்ததால் நேற்று, மீண்டும் பரிசல் சவாரி தொடங்கியது. இதையெடுத்து, சுற்றுலா பயணிகள் உற்சாகமாக பரிசல் சவாரி செய்தனர்.
ஒகேனக்கல் காவிரியாற்றில், நீர்வரத்து குறைந்ததால், சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்தது. நேற்று, பரிசல் சவாரி மீண்டும் தொடங்கப்பட்டதால், வரும் நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.