சென்னை வந்தார் அண்ணாமலை; இனி தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!
சென்னை வந்தார் அண்ணாமலை; இனி தமிழக அரசியல் சூடு பிடிக்கும்!
UPDATED : டிச 01, 2024 04:14 PM
ADDED : டிச 01, 2024 01:25 PM

கோவை: கொடிசியா வளாகத்தில், 'விழித்திரு எழுந்திரு உறுதியாக இரு' என்ற நிகழ்ச்சியில் இன்று (டிச.,01) இரவு 7 மணிக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை பேசுகிறார். 3 மாத இடைவெளிக்கு பிறகு அவர் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சி என்பதால், பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, சர்வதேச அரசியல் தொடர்பான உயர் படிப்பு படிப்பதற்காக, 3 மாத காலம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலை சென்றிருந்தார். உயர் படிப்பு முடிந்த நிலையில், இன்று அவர் தமிழகம் திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அண்ணாமலைக்கு பா.ஜ., வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர், அங்கிருந்து கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட பா.ஜ., தரப்பில் தடபுடல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 5 மணிக்கு கொடிசியா வளாகத்தில், 'விழித்திரு எழுந்திரு உறுதியாக இரு' என்ற நிகழ்ச்சியில் அண்ணாமலை பங்கேற்க இருக்கிறார். இரவு 7 மணிக்கு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றுகிறார்.
அவர் 3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் முதல் முறையாக பங்கேற்பதால் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் தமிழகத்தில் இல்லாத 3 மாத காலத்தில் வெவ்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியுள்ளார். உதயநிதி துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். அகில இந்திய அளவில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்று மஹாராஷ்டிரா, ஹரியானா தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
இத்தகைய பின்னணியில், அண்ணாமலை இன்றைய கூட்டத்தில் பேச இருக்கிறார். அவரது பேச்சில், அனல் பறக்கும் என்று பா.ஜ., தொண்டர்கள் அனைவரும் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.