காந்திக்கு பின் இந்தியாவை புரிந்தவர் பிரதமர் மோடி கவர்னர் ரவி பாராட்டு
காந்திக்கு பின் இந்தியாவை புரிந்தவர் பிரதமர் மோடி கவர்னர் ரவி பாராட்டு
ADDED : நவ 02, 2025 12:57 AM
சென்னை: ''மகாத்மா காந்திக்கு பின், இந்தியாவை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடி,'' என, கவர்னர் ரவி கூறினார்.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா, நேற்று மாலை, சென்னை கவர்னர் மாளிகையில் கொண்டாடப்பட்டது.
போட்டிகளில் பங்கேற்ற மாணவ - மாணவியர் மற்றும் தனித்திறன் சார்ந்த நபர்களுக்கு, கவர்னர் ரவி விருதுகள் வழங்கினார்.
இதில், கவர்னர் ரவி பேசியதாவது:
கடந்த இரண்டு ஆண்டுகளாக, மாநிலங்கள் உருவான நாள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரே பாரதம், உன்னத பாரதம் என்பதை வெளிகாட்டும் வகையில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
ஆங்கிலேயர்கள் வரும் வரை, மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை. அவர்கள் தேவைக்கு ஏற்ப, லாபத்திற்காக இந்தியாவை ஆட்சி செய்தனர். இந்தியாவில் மழை, குளிர், வெப்பம் என, அனைத்து விதமான சூழலும், ஒரே நேரத்தில் வெவ்வேறு இடங்களில் கிடைக்கும்.
வடக்கு, தெற்கு என, இன்று நாம் பிரித்து பேசுகிறோம். வளர்ச்சி அடைய அடைய மாநிலங்கள் இடையே பிரிவினை அதிகரித்து வருகிறது. மொழி போராட்டம் நடந்த பின், மாநிலத்தில் பல நுாற்றாண்டுகளாக வாழும் மக்களை, மொழி சிறுபான்மையினர், புலம் பெயர்ந்தவர்கள் என கூறுகிறோம்.
கடந்த 10 ஆண்டுக்கு முன் வரை, மாவோயிஸ்ட் தாக்குதல் காரணமாக, ஆண்டுக்கு 6,000 பேர் வரை கொலை செய்யப்பட்டனர். தற்போது, வடகிழக்கு மாநிலங்கள் அமைதியாக உள்ளன. எந்த பிரச்னையும் இல்லை.
மகாத்மா காந்திக்கு பின், இந்தியாவை முழுமையாக புரிந்து கொண்ட ஒரே நபர் பிரதமர் மோடி.
இவர் ஆட்சிக்கு வரும் நேரத்தில், இந்தியாவில், 30 சதவீதத்திற்கு மேலான மக்கள் வறுமையில் வாழ்ந்தனர். இரண்டு வேளை உணவு, வீடு இல்லாமல் இருந்தனர். அறிவியல் ஆராய்ச்சியில் பின்தங்கி இருந்தோம்.
மோடியின் ஆட்சியில், 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டுள்ளனர். தற்போது, 6 சதவீதம் மட்டுமே வறுமை உள்ளது. இந்த வறுமையும் இல்லாத நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.

