பேச்சில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர் போராட்டம் வாபஸ்
பேச்சில் உடன்பாடு: சாம்சங் தொழிலாளர் போராட்டம் வாபஸ்
ADDED : அக் 15, 2024 09:30 PM

சென்னை:அமைச்சர் நடத்திய பேச்சை அடுத்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் நிறுவனத்தின் சி.ஐ.டி.யு., தொழிலாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
சாம்சங் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை, காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் உள்ளது.
அங்கு பணிபுரியும் தொழிலாளர்களில் ஒரு பிரிவினர், சி.ஐ.டி.யு., தொழிற்சங்கத்தை அங்கீகாரம் செய்வது உட்பட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9 முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தை கைவிட, தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் அமைச்சர்கள் அன்பரசன், கணேசன், ராஜா தரப்பில், ஏழு கட்டங்களாக பேச்சுநடத்தியும் உடன்பாடுஏற்படவில்லை.
இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்படி, பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், நேற்று முன்தினம் இரவு பேச்சு நடத்தப்பட்டது; நேற்றும் பேச்சு தொடர்ந்தது. அதில் உடன்பாடு ஏற்பட்டது.
பின், அமைச்சர்எ.வ.வேலு அளித்த பேட்டி:
முதல்வர் அறிவுறுத்தலில், நேற்றும், இன்றும் தொழிலாளர்கள் உடன் பேச்சு நடத்தினோம். இரு தரப்பினரும் ஏற்று கொள்ளும் வகையில் சுமூக முடிவு ஏற்பட்டது. இரு தரப்பும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுஉள்ளனர்.
தொழில் அமைதி, பொது அமைதி காக்கும் பொருட்டு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை உடனே கைவிட்டு, பணிக்கு செல்ல வேண்டும். மீண்டும் பணிக்கு திரும்பும்போது, நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.
நிர்வாகத்தினருக்கு தொழிலாளர்கள் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.
நாளையே போராட்டத்தை விலக்கி, வேலைக்கு போவதாக தொழிலாளர்கள் முடிவு செய்து உள்ளனர். நிர்வாகமும், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தொழிலாளர்களுக்கு தேவையான சலுகைகள் அளிக்கப்படும் என்ற உத்தரவாதத்தைஅளித்துள்ளது.
போராட்டத்திற்கு முன் எப்படி தொழிலாளர்கள் பணியாற்றினரோ, அதேபோல நட்புடன் பணியாற்ற, நிர்வாகம்ஒத்துழைக்கும். தொழிலாளர்களுக்கும், நிர்வாகத்திற்கும் அரசு பொதுவானது. சி.ஐ.டி.யு., சங்க அங்கீகாரம் தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பை அரசு ஏற்கும்.
இது, தொழிலாளர்களின் நலனை ஆதரிக்கிற அரசு. தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதற்காகதான், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துவந்து, தொழில் துவங்க முதல்வர் நடவடிக்கை எடுக்கிறார்.
வேலைவாய்ப்பு, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க, தொழிலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருக்கலாம்.கூட்டணி கட்சி தலைவர்கள் என்னிடம் பேசினர். அவர்கள், சாம்சங் விவகாரத்தை விரைவாக முடிக்குமாறு அறிவுறுத்தினர்.
இப்பிரச்னையில்மட்டுமல்ல, கூட்டணி கட்சி தலைவர்கள் எப்போதும் ஒற்றுமையுடன் தான்உள்ளனர்.
இவ்வாறு அவர்கூறினார்.
சி.ஐ.டி.யு., தொழிற்சங்க பொதுச்செயலர் சவுந்தரராஜன் கூறுகையில், ''பேச்சு சுமூகமாக நடந்தது; அதில் நல்ல முடிவுக்குவந்திருக்கிறோம்,'' என்றார்.